நிவாரணக் கிராமங்களில் உறவினர்களை சந்திக்க விசேட வரவேற்பறைகள்:மஹிந்த சமரசிங்க

நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போரை அவர்களது உறவினர்கள் நேரில் சந்தித்து உரையாடுவதற்கு வசதியாக அனைத்து நிலையங்களிலும் விசேட வரவேற்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை எதிர்வரும் 11ம் திகதி சனிக்கிழமை முதல் திறந்து வைக்கப்படுமென அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். உள்ளூரில் இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போரை அவர்களது உறவினர்கள் முகாம்களுக்கு நேரடியாக விஜயம் செய்து வரவேற்பறையில் அமர்ந்து சகவாசமாக உரையாட முடியுமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தொலைபேசி இணைப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்த 15 நிவாரணக் கிராமங்களுக்கும் நேற்று முதல் சர்வதேச தொலைபேசி இணைப்பு வசதிள் (ஐ.டி.டி.) வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், முகாம்களில் உள்ளவர்கள் வெளிநாட்டிலுள்ள தமது உறவினர்களுடன் தாராளமாக பேச முடியுமெனவும் அமைச்சர் கூறினார்.

இலங்கை அரசாங்கம் முகாம்களில் தங்கியிருப்போருக்கு எவ்வித வசதிகளும் வழங்காது கைதிகளைப் போல் வைத்திருப்பதாக சர்வதேச சமூகத்தினரிடையே தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் கூறுவதுபோலவே இருப்பின் எதற்காக நாம் வெளிநாட்டு பிரதிநிதிகளைஇ முகாம்களை நேரில் பார்வையிட அழைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், புலிகளின் பிடியிலிருந்து நேற்று வரை 64 ஆயிரத்து 147 சிவிலியன்கள் பாதுகாப்பு வலயத்துக்கு வருகை தந்துள்ளனர். அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் ஐ.சி.ஆர்.சி.யினால் 18 தடவைகளில் 7 ஆயிரத்து 566 சிவிலியன்கள் புதுமாத்தளனிலிருந்து திருகோணமலை மற்றும் புல்மோட்டை பகுதிகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 3 ஆயிரத்து 488 பேர் பாரிய மற்றும் சிறிய காயங்களுக்கு உள்ளானவர்கள். இவர்களுள் இயற்கையான சுகயீனம் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் ஆகியோரும் அடங்குகின்றனர். ஏனையவர்கள் அனைவரும் அவர்களது உறவினர்களாவர். இன்னுமொரு தொகுதி நோயாளர்களையும் அவர்களது உறவினர்களையும் திருமலைக்கு எடுத்துச் செல்வதற்காக நேற்று மீண்டும் கப்பல் புதுமாத்தளனிற்கு சென்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் இலங்கை வந்திருந்த ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியான வோல்ட்டர் கெலின் வவுனியா நிவாரணக் கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்டு திருப்தியடைந்ததாக மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ரஜீவ் விஜேசிங்க கூறினார்.

கடந்த சனிக்கிழமை விசேட விமானம் மூலம் அநுராதபுரம் வந்திருந்த வோல்ட்டர் கெலின் தமது விருப்பத்துக்கமைய இராணுவத்தினரின் உதவியுடன் முதலில் ஓமந்தைக்குச் சென்றார். அங்குள்ள சோதனைச்சாவடியில் சிவிலியன்கள் எவ்வாறு பொறுப்பேற்கப்படுகிறார்கள். ஐ.சி.ஆர்.சி.யினர் அவர்களுடன் உரையாடுவது அனைத்தையும் பார்வையிட்ட கெலின் தான் அது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, வவுனியா சென்ற அவர் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சின் கீழ் இயங்கும் முகாமைத்துவக் குழு, அரசாங்க அதிபர் ஆகியோருடன் உரையாடி அங்குள்ளவர்கள் குறித்து பல விடயங்களை அறிந்து கொண்டார்.

முகாம்களில் தங்கியிருப்பவர்கள் சுதந்திரமாக வெளியில் சென்றுவர அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அதற்காக சகலராலும் விரும்பப்படக் கூடிய ஒரு முறைமை அமுல் செய்யப்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார். தாம் கடந்த காலங்களில் பாதுகாப்புக்கு இடையூறு இல்லாத வகையில் முதியவர்கள், சிறுவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் தனித்திருக்கும் தாய்மார்களை அவர்களது உறவினர்களிடம் அனுப்பிவைத்திருப்பது குறித்து கெலினுக்கு விளக்கமளித்துள்ளோம் என அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply