தலைவர்கள் மீது காலணிகளை வீசி அவமதிப்பது என்பது நாகரிகமுடைய எவரும் மகிழ்ச்சியோ திருப்தியோ அடையக் கூடிய செயல் அல்ல

அரசியல்தலைவர்களை நோக்கி காலணிகளை வீசுவது மக்களின் கவனத்தை எளிதாக ஈர்க்கக் கூடிய ஒரு பிரசித்தமான போராட்ட வடிவமாக மாறிவருகிறது போலத் தோன்றுகிறது. கடந்த வருட இறுதியில் பாக்தாத்திற்கு விஜயம் செய்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷை நோக்கி செய்தியாளர் மகாநாட்டில் தனது இரு சப்பாத்துகளையும் வீசி இந்தப் போராட்டப் போக்கை ஈராக்கிய தொலைக்காட்சி சேவையின் செய்தியாளரான முண்டாசர் அல்ஸெய்டியே ஆரம்பித்துவைத்தார்.

இவருக்கு ஈராக்கிய நீதிமன்றமொன்று இம்மாத ஆரம்பத்தில் மூன்றுவருட சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது. அடுத்து கடந்த பெப்ரவரியில் பிரிட்டனுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த சீனப் பிரதமர் வென் ஜியாபாவோ கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவரை நோக்கி மாணவர் ஒருவர் தனது சப்பாத்தை வீசினார். அதையடுத்து சுவீடனுக்கான இஸ்ரேலியத் தூதுவர் ஸ்ரொக்ஹோம் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது அவரை நோக்கியும் சப்பாத்து வீசப்பட்டது. இறுதியாக நேற்றைய தினம் புதுடில்லியில் செய்தியாளர் மகாநாட்டில் வைத்து இந்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரத்தை நோக்கி சீக்கிய செய்தியாளர் ஒருவர் தனது சப்பாத்தை வீசியசம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

இந்தியாவில் செல்வாக்குமிக்க அரசியல் தலைவர் ஒருவரை நோக்கி சப்பாத்து வீசப்பட்ட முதல் சம்பவம் இது என்று கூறப்படுகிறது. புதுடில்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நேற்றுக்காலை செய்தியாளர் மகாநாட்டில் அமைச்சர் சிதம்பரம் பயங்கரவாதத்துக்கு எதிராக காங்கிரஸ் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்துக் கொண்டிருந்தார். அப்போது டெய்னிக் ஜாக்ரான் என்ற இந்தி மொழித் தினசரியின் சிரேஷ்ட செய்தியாளரான ஜர்னைல் சிங் 1984 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் கொலையை அடுத்து சீக்கியர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளில் முன்னாள் அமைச்சரான ஜக்திஷ் ரைட்லருக்கு தொடர்பு இல்லை என்று மத்திய புலனாய்வுப் பணியகம் (சி.பி.ஐ.) நீதிமன்றத்திற்கு அறிவித்திருப்பது தொடர்பாக கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் ரைட்லர் தொடர்பில் சி.பி.ஐ.சமர்ப்பித்த அறிக்கை அரசியல் நோக்கம் கொண்டதா என்பதுதான் அந்த சீக்கிய செய்தியாளரின் கேள்வி. இதற்குப் பதிலளித்த சிதம்பரம், ” சி.பி.ஐ. எனது பொறுப்பில் உள்ள உள்துறை அமைச்சின் கீழ்வரவில்லை. எனக்குத் தெரிந்த வரையில் உள்துறை அமைச்சோ அல்லது வேறுஎந்த அமைச்சுமோ சி.பி.ஐ. மீது நெருக்குதல்களைப் பிரயோகிக்கவில்லை. சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பித்திருக்கிறது. அதை ஏற்றுக்கொள்வதோ அல்லது நிராகரிப்பதோ அல்லது மேலதிக விசாரணையை நடத்துமாறு சி.பி.ஐ. யிடம் கோருவதோ நீதிமன்றத்தைப் பொறுத்தவிடயம்’ என்று கூறினார்.

ஜர்னைல்சிங் மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்கவிரும்பினார். ஆனால், சிதம்பரம் அதற்கு அனுமதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபடநான் விரும்பவில்லை என்று கூறி மேலும் கேள்விகளை ஏற்றுக்கொள்ள மறுத்தபோது, ‘இதை நான் ஆட்சேபிக்கிறேன்’ என்று ஆவேசத்துடன் கூறிக்கொண்டு அந்தச் செய்தியாளர் தனது சப்பாத்துகளில் ஒன்றை அமைச்சரை நோக்கி வீசினார். சப்பாத்து சிதம்பரம் மீது படவில்லை. ஆனால், செய்தியாளர் மகாநாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பதற்றப்படாதவராகத் தன்னைக் காட்டிக்கொண்ட சிதம்பரம் ஜர்னைல் சிங்கை அமைதியாக வெளியில் கூட்டிச் செல்லுங்கள் என்று கேட்டார். சிவில் உடையில் இருந்த பொலிஸ்காரர்கள் ஜர்னைல் சிங்கை காங்கிரஸ் தலைமையகத்தில் இருந்து வெளியேற்றி அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குக் கூட்டிச் சென்றனர். பொலிஸ் காவலில் இருந்தவாறே தொலைபேசிமூலம் வெளியில் உள்ள செய்தியாளர்களுடன் பேச அனுமதிக்கப்பட்ட ஜர்னைல்சிங் “எனது ஆட்சேபத்தை தெரிவித்த முறையில் தவறு இருக்கக்கூடும். ஆனால், நான் கிளப்பிய சர்ச்சை சரியானதே ‘ என்று கூறியதாக செய்தி நிறுவனங்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. வேறுவழியில் ஆட்சேபத்தை வெளிக்காட்டியிருக்க முடியாதா என்று அவரிடம் கேட்கப்பட்டபோது கடந்த 25 வருடங்களாக இதுதானே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆட்சேபத்தை வெளிக்காட்ட வேறுஎன்ன வழி மீதமாக இருக்கிறது என்று ஜர்னைல் சிங் பதிற்கேள்வி கேட்டாராம். தவறெதையும் இழைத்ததான உணர்வுடன் அந்தச் செய்தியாளர் காணப்படவில்லையெனினும், அவரை மன்னிப்பதாக அமைச்சர் சிதம்பரம் கூறிவிட்டார்.

சிதம்பரம் மீதான இந்தச் சப்பாத்து வீச்சுச் சம்பவம் பற்றிய செய்திகள் நேற்றும் இன்றும் ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. பல்வேறு தரப்புகளில் இருந்தும் பிரதிபலிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவின் அரசியல் கட்சிகளிடம் இருந்து கண்டனங்கள் வெளியாகிக் கொண்டிருப்பதற்கு மத்தியில் ஜர்னைல் சிங்கின் “வீரத்தையும் துணிச்சலையும்’ பாராட்டியிருக்கும் சீக்கிய அரசியல் கட்சியான சிரோமணி அகாலிதல் அவருக்கு 2 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப் போவதாக அறிவித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்தச் செயலைப் பார்க்கும் போது புஷ்ஷை நோக்கிச் சப்பாத்தை வீசிய ஈராக்கிய செய்தியாளருக்கு ஆதரவு தெரிவித்து அரபுலகில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தான் நினைவுக்கு வருகிறது. பாக்தாத் சம்பவத்துக்குப் பிறகு நடுநிலையாக நின்று விவகாரங்களை நோக்கிக் கடமைப்பட்டவர்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்ற செய்தியாளர்கள் உணர்ச்சி மேலீட்டினால் வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் மீது சப்பாத்தை வீசலாமா என்ற கேள்வி பல வட்டாரங்களில் இருந்து கிளம்பியது. அத்துடன் பத்திரிகையாளர்களுக்கு இருக்க வேண்டிய நெறிமுறைப்பற்றியும் வாதப் பிரதிவாதங்கள் முண்டன. மீண்டும் இப்போது சப்பாத்து வீச்சில் இன்னொரு செய்தியாளர் ஈடுபட்ட சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

அரசியல் தலைவர்கள் மீது காலணிகளை வீசி அவமதிப்பது என்பது நயநாகரிகமுடைய எவரும் மகிழ்ச்சியோ திருப்தியோ அடையக் கூடிய செயல் அல்ல. ஆனால், இத்தகைய செயல்களில் ஈடுபடுவதற்கு ஈராக் செய்தியாளரையும் இந்தியச் செய்தியாளரையும் தூண்டிய காரணிகள் எவை என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியமானதாகும். ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பினால் எண்ணெய் வளம்மிக்க அந்த அரபுநாட்டில் ஏற்பட்டிருக்கும் அவலங்களினால் ஆவேசமுற்ற அந்தச் செய்தியாளர் புஷ்ஷை நோக்கி “நாயே இது ஈராக்கிய மக்களின் ஒரு பிரியாவிடை முத்தம்’ என்று கூறிக் கொண்டு தான் சப்பாத்தை வீசினார். நேற்றைய தினம் சிதம்பரத்தை நோக்கிச் சப்பாத்தை வீசிய சீக்கியச் செய்தியாளரும் 25 வருடங்களுக்கு முன்னர் தனது சமூகத்தினருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகத் தான் தனது ஆவேசத்தை வெளிக்காட்டினார். ஊடகவியலாளர்கள் தாங்கள் சார்ந்த சமூகத்துக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்கு, அந்த சமூகங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும் அவலங்களுக்கு எதிராக குரல் எழுப்பாமல் ஒருமாயைத் தனமான நடுநிலையைக் கடைப்பிடிப்பது சாத்தியமில்லை என்பது எமது அபிப்பிராயம். எமது இந்த நிலைப்பாட்டை சப்பாத்து வீச்சுக்களை நியாயப்படுத்தும் ஒன்றாக அர்த்தப்படுத்த வேண்டியதில்லை. அரசியல் தலைவர்களை நோக்கி காலணிகள் வீசப்படுகின்ற சம்பவங்களை தனிநபர்களின் உதிரிச் செயல்களாக நோக்குவது தவறு. அத்தகைய சம்பவங்களுக்குப் பின்னால் சமூக அநீதிகளுக்கு எதிரான குமுறல்கள் இருக்கின்றன என்ற உண்மை உணரப்பட வேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply