உலகில் முதல் முறையாக ஒட்டுகேட்பதை தடுக்கும் புதிய செயற்கைகோள்: வெற்றிகரமாக விண்ணில் ஏவி சீனா சாதனை
உலகில் முதல் முறையாக, ஒட்டுகேட்க வழியில்லாத அதிநவீன தொலைத் தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சீனா சாதனை படைத்துள்ளது. சீனாவின் விண்வெளித்துறை சார்பில் நேற்று மிசியூயஸ் என்ற பெயரில் சுமார் 600 கிலோ எடை கொண்ட புதிய தொலைத் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. வடமேற்கு பகுதியில் உள்ள கோபி பாலைவனத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் ஜியுகுவான் விண்வெளி மையத்தில் இருந்து அதிகாலை 1.40 மணிக்கு இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த அந்த செயற்கைக்கோள் பூமியை 90 நிமிடத்திற்கு ஒரு முறை சுற்றி வரும்படி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சீனாவின் பாதுகாப்பு நலனுக்காக இந்த தொலைத் ெதாடர்பு செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது. பூமியில் இருந்து விண்வெளியில் சுற்றிவரும் செயற்கைக்கோளுக்கு செல்லும் தகவலையும், செயற்கைக்கோளில் இருந்து பூமியில் வேறொரு இடத்தில் இருக்கும் தொலைத்தொடர்பு கருவிக்கு செல்லும் தகவலையும் எந்தவொரு தொழில்நுட்பத்திலும் இடைமறிக்க கேட்கவோ, பெறவோ முடியாது. இதுபோன்ற நவீன தொழில்நுட்பம் கொண்ட தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது இதுவே உலகிலேயே முதல் முறை. இதில் குவாண்டம் இயற்பியல் வழியிலான தொலைத்தொடர்பு அலைவரிசை பயன்படுத்தப்படுகிறது.
இதை இடைமறித்து பெற முடியாது. அதாவது எளிதாக கூறினால், ஒரு ‘அ’ என்ற சொல்லுக்கு சுமார் பல ஆயிரம் வெவ்வேறு வடிவிலான புள்ளிகள் இருக்கும். இந்த புள்ளிகளை ஒருங்கிணைத்து அது ‘அ’ என்று கண்டுபிடிக்க வேண்டும். ஆனால், கண்டுபிடித்துவிட்டாலும், சிக்கல் நீடிக்கும். ஏனெனில், ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு எழுத்துக்கும், நாம் பேசும் ஒலிக்கும் இந்த புள்ளிகள் மாறிக் கொண்டே இருக்கும். இதனால் இதை இடைமறித்து உடனடியாக அதை புரிந்து கொள்வது என்பது மிக, மிக கஷ்டமான காரியம். மேலும், இந்த புள்ளிகளை இடைமறித்து உணர்வது இதைவிட கடினமான காரியம். இதனால்தான் இது ஒட்டுகேட்க வழியில்லாத தொலைத்தொடர்பு செயற்கைக்கோளாக கருதப்படுகிறது.
இது தகவல் தொழில்நுட்பத்தில் புதிய சாதனை என்று சீனாவின் விண்வெளி தலைவர் பான் ஜெயின்வாய் தெரிவித்தார். வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தில் சீனாவை உளவு பார்த்து வரும் வல்லரசு நாடுகள், இனி அதன் செயற்கைக்கோள் வழியிலான தொலைத்தொடர்பு தகவல்களை எந்த முறையிலும் இடைமறித்து பெற முடியாது.
* பேஸ்புக்கில் தினமும் 6 லட்சம் பேரின் ரகசியங்களை தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள் மென்பொருள் திருடர்கள்.
* ஐரோப்பா, அமெரிக்காவில் சிறிய வங்கிகளில் இருந்து ஆண்டுக்கு ₹6500 கோடி மென்பொருள் திருட்டுகளில் பறிபோகிறது.
* யாராலும் கண்டுபிடிக்க முடியாத பாஸ்வேர்ட் அமைக்க சிறிய,பெரிய ஆங்கில எழுத்து, எண்கள், குறியீடுகள் கலந்து எட்டு எழுத்துக்கும் மேலான ஒரு வார்த்தையை பயன்படுத்த வேண்டும். அதை அடிக்கடி மாற்றி அமைக்கவும் வேண்டும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply