குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும்வரை அமைச்சு பதவிகளில் இருந்து தாமாகவே விலகியிருக்க வேண்டும்:வீ. ஆனந்தசங்கரி

sangariவட மாகாணசபையில் மூன்று அமைச்சர்களின் நடவடிக்கைகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணை செய்வதற்கான தீர்மானத்தை வடமாகாணசபை நிறைவேற்றியுள்ளதானது எனக்கு மிகவும் அதிர்ச்சியை தருகின்றது. அதாவது தமிழரசு கட்சி, மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் பிரமுகர்கள் எவர்மீதும் எந்தவொரு காலகட்டத்திலும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவும் இல்லை என்பது மட்டுமல்ல அவ்வாறான செயலில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவரும் ஈடுபடவும் இல்லை. இதுதான் தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் கடந்தகால வரலாறு.
எல்லாவற்றையும் இழந்த எமது மக்களுக்கு ஏதாவது சேவை செய்வார்கள் என்ற எண்ணத்தில்தான் தமிழ் மக்கள் அவர்களை தெரிவு செய்தார்கள்.

ஆனால் இவர்கள் மக்களுக்கு சேவை எதுவும் செய்யாமலேயே ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு மட்டும் ஆளாகியுள்ளார்கள். குற்றச்சாட்டுக்கள் உண்மையா, பொய்யா என்பது வேறு விடயம். இக்குற்றச்சாட்டுகளை கேள்விப்பட்டவுடன் தம்மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும்வரை அமைச்சு பதவிகளில் இருந்து தாமாகவே விலகியிருக்க வேண்டும். அதுதான் ஒழுக்கமான அரசியல் பண்பாடாகும். அதுவும் தங்களை மானமுள்ள வீரமுள்ள அநீதிகளை தட்டிக்கேட்கும் தீரர்கள் என்று கூறிக்கொண்டு பதவிமீதுள்ள ஆசையால் ஒட்டிக்கொண்டிருப்பது மிகவும் நகைப்பிற்குரியதாகும்.
தந்தை செல்வாவின் வழிவந்தவர்கள் என்று தம்மை கூறிக்கொண்டு; இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது வெட்கக்கேடான விடயமாகும். தந்தை செல்வா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலங்களில் அரசாங்கம் வழங்கிய வாகனத்தைக்கூட வாங்காமல் ஒரு பழைய காரிலேயே பயணம் செய்தவர். இன்று அவர் வழியை பின்பற்றுகிறோம் என்று கூறிக்கொண்டு மிகவும் விலை உயர்ந்த அதி நவீன கிட்டத்தட்ட 60 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனத்தை வரி ஏய்ப்பு செய்து ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பெற்றுள்ளார் என அறிகின்றோம். அவர் இதற்கு எதுவித மறுப்பும் தெரிவிக்காதது மட்டுமல்ல சக பாராளுமன்ற உறுப்பினர்களாலும் இது மூடி மறைக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல பாராளுமன்ற உறுப்பினர்கள் வாகனம் ஒன்றை வாங்குவதற்காக ஒரு கோடி ரூபா கடன் கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வாக்களித்த மக்கள் உடல் உறுப்புக்களை இழந்து சக்கர நாற்காலிகளையும், ஊன்றுகோல்களையும் பாவித்து அலைந்து திரிகின்றனர். இவர்கள் வாங்கும் கடனில் பாதியளவு பணத்தையாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு செலவு செய்வார்களா? வெறுமனே வீர வசனங்களும், வெற்றுக்கோஷங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்துவதிலேயே காலத்தை கழிக்காமல் இவ்வாறான செயல்களை செய்வதற்கும் இவர்கள் முன்வர வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் படும் கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கும் நிதியின் ஒரு பகுதியினை இந்த மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயன்படுத்தலாம்தானே. எல்லாவற்றையும் அரசாங்கமே செய்ய வேண்டும் என எதிர்பார்த்து கொண்டிருக்காமல் இவ்வாறான சில தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பும், கடமையுமாகும். எம்மவர்கள் செய்வார்களா? அல்லது அப்படியொரு சிந்தனை உதிக்குமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

வீ. ஆனந்தசங்கரி,
செயலாளர் நாயகம்,
தமிழர் விடுதலைக் கூட்டணி

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply