டலஸின் இராஜினாமா அறிவிப்பு புதிய விடயமல்ல : சந்திம வீரக்கொடி

santhima ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப் பெரும மாத்தறை மாவட்டத்துக்கான கட்சி தலைமைத்துவ பதவியை இராஜினாமா செய்யப் போவதாக கூறியிருப்பது இது முதற்தடவை அல்ல என ஸ்ரீல.சு.க. உறுப்பினரும் பெற்றோலிய வளத்துறை அமைச்சருமான சந்திம வீரக்கொடி நேற்று தெரிவித்தார்.

 

“டளஸ் அழகப் பெரும எம்.பி. ஏற்கனவே ஒரு தேர்தல் சமயம் கட்சியை விட்டு வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியின் ஒப்பந்த அடிப்படையில் அமெரிக்கா வரை சென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தூற்றி வந்தார். இவர் தற்போது கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவியை இராஜனாமா செய்ய முடிவு செய்துள்ளார் என்றால் அவருக்கு மீண்டும் அமெரிக்காவிடமிருந்து அழைப்பு கிடைத்திருக்குமோ தெரியவில்லை” என்றும் அமைச்சர் வீரக்கொடி கூறினார்.

 

பெற்றோலிய வளத்துறை அமைச்சில் நேற்று (19) மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சரிடம் டளஸ் அழகப்பெரும எம்.பியின் இராஜினாமா குறித்து கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 

டளஸ் எம்.பி. இராஜினாமா செய்ய இருக்கும் தனது யோசனையை முன்வைத்துள்ளாரே தவிர அதற்கான கடிதத்தை முன்வைக்கவில்லை. இவ்வாறு கூறும் அனைவரும் இறுதியில் இராஜினாமா செய்வதுமில்லை. அத்துடன் அவர் இவ்வாறு கூறியிருப்பது முதற் தடவையல்ல என்பதனால் நாம் இது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ள தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65 வது மாநாடு குறித்து அனைத்து மாவட்டங்களிலுமுள்ள கீழ்மட்ட மக்களுக்கு விழிப்புணர்வூட்டி வருவதாகவும் மக்கள் இதற்கு சாதகமான சமிக்கையை வெளிக்காட்டியிருப்பதாகவும் அமைச்சர் வீரக்கொடி தெரிவித்தார்.

 

கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து எதற்காக சிரேஷ்ட உறுப்பினர்க்ள விலக்கப்பட்டுள்ளனர் என்றும்? ஊழல், மோசடிக்கு இடமில்லையென கூறிய பின்னர் எதற்காக போலி துப்பாக்கி காட்டி மக்களை அச்சுறுத்தியவருக்கு அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது? என்றும் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு பதிலளித்த அமைச்சர்: கட்சியின் செயற்பாடுகளால் சிரமங்களுக்கு உள்ளாகுவோரை அகற்றி கட்சிக்காக உழைத்தவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி பார்த்துள்ளதாக கூறினார்.

 

குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்படாதவர்கள் இருக்க முடியாது. என்றபோதும் பொது தேர்தலில் நால்வரை போட்டியிட விடாமல் கட்சி தடுத்து நிறுத்தியுள்ளது. இது போன்று படிப்படியாகவே நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமெனவும் அவர் விளக்கமளித்தார்.

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply