யாழ் தேவியும் உதய தேவியும்
ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி போக்குவரத்து வசதிகளில் பெருமளவில் தங்கியுள்ளது. பிரதேசத்தின் உற்பத்திப் பொருட்களை வெளியிடங்களுக்கு வர்த்தக ரீதியாக அனுப்புவதும் வெளியிடங்களிலிருந்து அவசியமான பொருட்களைப் பிரதேசத்துக்குக் கொண்டுவருவதும் அப்பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான செயற்பாடுகள். இவ்விடயத்தில் போக்குவரத்துச் சேவையின் பங்களிப்பு அளப்பரியது. பிரதேசங்களின் சமூக உறவுகளைப் பேணுவதிலும் போக்குவரத்துச் சேவைகளின் பங்கு முக்கியமானது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த மக்கள் போக்குவரத்துச் சேவையின் பலனை ஒருகாலத்தில் நன்கு அனுபவித்தார்கள். ரயில் சேவையும் வீதிப் போக்குவரத்து வசதிகளும் இவ்விரு மாகாணங்களையும் சேர்ந்த மக்களின் சமூக, பொருளாதார வாழ்வுக்குப் பெரிதும் கைகொடுத்தன. ஆனால் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தவுடன் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன. ரயில் சேவை தடைப்பட்டது. வீதிப் போக்குவரத்து சிரமங்கள் நிறைந்ததாக இருந்ததோடு சில இடங்களில் முற்றாகத் தடைப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டம் இலங்கையின் ஏனைய பகுதிகளிலிருந்து முற்றாகத் துண்டாடப்பட்டது எனக் கூறலாம். ரயில் சேவை முற்றாகத் தடைப்பட்டது. பிற மாவட்டங்களுடனான வீதிப் போக்குவரத்து சாத்தியமற்ற தாகியது. இதனால் யாழ்ப்பாண மாவட்ட மக்களின் சமூக, பொருளாதார வாழ்வு மிகவும் பின்னடைவு காணலாயிற்று.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவ டிக்கையில் ஈட்டிவரும் வெற்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் நன்மை பயக்கும் திருப்புமுனை எனக் கூறுவது தவறாகாது.
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான ஏ9 பாதை பாவனைக்கு வந்திருப்பது யாழ்ப்பாணத்தில் உடனடி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்தன. யாழ்ப்பாண உற்பத்திப் பொருட்கள் கொழும்புச் சந்தைக்கு வரத் தொடங்கியதால் குடாநாட் டுப் பொருளாதாரத்தில் வளர்முக மாற்றம் ஏற்படுகின்றது. ஏ9 பாதை விரைவில் பொது மக்களின் பாவனைக்கு வரும் போது மேலும் பல நன்மைகளை மக்கள் அனுபவிக்க முடியும்.
அடுத்த கட்டமாக ரயில் சேவையை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் இப்போது மேற்கொள் கின்றது. மட்டக்களப்புக்கான உதயதேவி கடுகதி ரயில் சேவை நேற்றுமுன்தினம் (ஏப். 6) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஒரே நாளில் கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கும் மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கும் இரண்டு உதய தேவிகள் சேவையில் ஈடுபடவுள்ளன. மட்டக்ளப்பு மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
யாழ்தேவி கருத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்துக்கான ரயில்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்திருக்கின்றது. மட்டக்களப்பு சேவையைப் போல யாழ்ப்பாண ரயில் சேவையை உடனடியாக ஆரம்பிப்பது சாத்தியமில்லை. ரயில் நிலையங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. ரயில் பாதைகள் பல இடங்களில் தகர்க்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் திருத்திய மைத்த பின்னரே சேவையை ஆரம்பிக்க முடியும். முன்னுரிமை அடிப்படையில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இத்திருத்த வேலைகளுக்குப் பரந்த அளவில் மக்களின் பங்களிப்புப் பெறப்படவுள்ளது.
ஜனாதிபதி தனது ஒருமாத சம்பளத்தை இதற்காக வழங்கியுள்ளார். மேலும் பலர் நன்கொடைகளை வழங்கியுள்ளனர். சிங்கள மக்களின் பங்களிப்புடன் யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை ஆரம்பிப்பது இனங்க ளுக்கிடையிலான புரிந்துணர்வையும் நல்லுற வையும் வலுப்படுத்தும் என்பதையும் விசேடமாகக் குறிப்பிட வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயத்தில் சிறிதளவேனும் அக்கறை கொள்ளவில்லை. கூட்டமைப்பினரின் விமர்சனத்துக்கு உள்ளாகும் தலைவர்களே மக்களின் போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் முன்கை எடுத்துச் செயற்படுகின்றனர். மக்களின் நாளாந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முயற்சிக்காமல் வெறுமனே சித்தாந்தம் பேசிப் பேசியே காலத்தைச் கழிக்கும் தலைமை அவசியம் தானா என்று மக்கள் முடிவு செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது.
மூலம்/ஆக்கம் : ஒலி-ஒளி செய்திகள்You can leave a response, or trackback from your own site.
Leave a Reply