பான் கி மூன் ஒரு முட்டாள்: ஒபாமாவை சீண்டிப்பார்த்த பிலிப்பைன்ஸ் அதிபர் பாய்ச்சல்
லாவோஸ் நாட்டில் வியன்டியான் நகரில் 14-வது ஆசியன் மற்றும் 11-வது கிழக்கு ஆசிய மாநாடு சமீபத்தில் நடைபெற்றது.இந்த மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே-வை கடந்த 6-ம் தேதி அமெரிக்காவின் லாவோஸ் நகரில் சந்தித்துப் பேச முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பின்போது, பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் விவகாரத்தில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ரோடிரிகோ டுட்டர்டே-விடம் ஒபாமா கேள்வி எழுப்புவார் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர்.
இதுதொடர்பாக செய்திகள் வெளியானதும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே பொங்கி எழுந்தார். அந்நாட்டு ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், ஒபாமாவை சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்தார்.
’ஒபாமா என்ன பெரிய கொம்பனா?, நான் ஒன்றும் அமெரிக்காவுக்கு தலையாட்டி பொம்மை இல்லை. நான் இறையாண்மை மிக்க ஒரு நாட்டின் அதிபர். என்நாட்டு மக்களை தவிர வேறு யாருக்கும் நான் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெட்டை நாயின் மகனே.., (Son of a bitch) உன்னை (ஒபாமா) சபித்து விடுவேன்’ என்று அவர் பொறிந்துத் தள்ளினார்.
ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஒபாமா சீனா சென்றிருந்தபோது ரோடிரிகோ டுட்டர்டே அளித்த இந்த பேட்டி தொடர்பான செய்திகள் உலக ஊடகங்களில் வெளியாகின.
இதையடுத்து, பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே-வை அமெரிக்க அதிபர் ஒபாமா சந்தித்துப் பேச முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.
இந்த சந்திப்புக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் தென்கொரியா அதிபர் பார்க் கெவ்ன் ஹே-வை அதிபர் ஒபாமா சந்திப்பார் என வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், நேற்று முன்தினம் ஆசியான் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் கலந்துகொண்ட விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே-வும் சந்தித்துப் பேசியதாகவும், விருந்து முடிந்ததும் இருவரும் கடைசியாக ஒன்றாக வெளியே வந்ததாகவும் மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரோடிரிகோ டுட்டர்டே, ஒபாமாவை நான் நாய்க்கு பிறந்தவன் என்று சொல்லவே இல்லை என்று தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் விவகாரத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் மனித உரிமை மீறல் நடப்பதாக சில வாரங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன் கூட ஒரு அறிக்கை வெளியிட்டார். அவரும் ஒரு முட்டாள் என நேற்றைய செய்தியாளர்கள் கூட்டத்தின்போது ரோடிரிகோ டுட்டர்டே குறிப்பிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் விசாரணை ஏதுமின்றி சுட்டுக்கொல்லப்பட்டதாக உலக நாடுகளும் ஐ.நா. சபையும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply