அமெரிக்கா – ரஷியா கூட்டு முயற்சிக்கு வெற்றி: சிரியாவில் 12-ம் தேதி முதல் போர்நிறுத்தம்

russlandusaசிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த அந்நாட்டில் உள்ள பல்வேறு போராளி குழுக்கள் தனித்தனியாகவும் கூட்டாகவும் இணைந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 12 ஆயிரம் குழந்தைகள் உள்பட சுமார் 3 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷியாவும், கிளர்ச்சியாளர்களுக்கு மறைமுக ஆதரவாக சவுதி அரேபியாவும், அமெரிக்காவும் உள்ள நிலையில் அரசுக்கும் எதிர்ப்பு குழுக்களுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்தால்தான் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வரும் என்பதால் ஐக்கிய நாடுகள் சபையின் யோசனைப்படியும், அமெரிக்காவின் தலையீட்டினாலும் இருதரப்பினருக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சிரியாவில் அமைதி நிலவ நிரந்தர தீர்வை ஏற்படுத்துவது தொடர்பாக ஜெர்மனி நாட்டின் முனிச் நகரில் 17 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.

கிளர்ச்சியாளர்கள் மற்றும் சிரியா அரசு அதிகாரிகள் இடையே நேரடியாக அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்துவதற்கான செயல்திட்டத்தை வடிவமைப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அமெரிக்கா, ரஷியா, ஈரான், ஜெர்மனி உள்ளிட்ட உலகின் பலமிக்க 17 நாடுகள் நடத்திய இந்த ஆலோசனை கூட்டத்தில் சிரியாவில் நிரந்தர அமைதி ஏற்பட அரசியல்ரீதியான தீர்வை முன்னெடுத்து செல்ல வசதியாக சிரியா ராணுவம் மற்றும் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் தனிநபர் போராளி குழுக்கள் மற்றும் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிளர்ச்சியாளர்கள், ஹெஜ்புல்லா இயக்கப் போராளிகள் மற்றும் ரஷியா ஆதரவுப் படைகள் உள்பட அனைத்து தரப்பினரும் வெள்ளைக் கொடியை ஏந்தி போரை கைவிட வேண்டும்.

இருதரப்பினரும் தங்கள்வசம் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் மக்களை விடுவிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு மேற்கண்ட 17 நாடுகளும் ஒருமனதாக சம்மதம் தெரிவித்தன. அங்கு தடைப்பட்டுள்ள மனிதநேய நிவாரண உதவிகளை உடனடியாக மேற்கொள்ளவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, அமெரிக்காவும், ரஷியாவும் சேர்ந்து உருவாக்கி கையொப்பமிட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த பிப்ரவரி தாக்கல் செய்யப்பட்டது.

இரண்டாம்சுற்று பேச்சுவார்த்தையில் நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்கா – ரஷியா இடையில் இவ்விவகாரத்தில் ஒருமித்த கருத்தை எட்ட முடியாமல் போனதால் பேச்சுவார்த்தை நீண்டுகொண்டே போனது.

சீனாவில் சமீபத்தில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் சந்தித்து சிரியாவில் நிரந்தர போர்நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என தீர்மானித்தனர்.

இதையடுத்து, அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி மற்றும் ரஷிய நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ராவ் ஆகியோர் இன்று போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

சிரியாவில் இருதரப்பினருக்கும் இடையில் ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட ஐந்து அம்சங்களை கொண்ட உடன்படிக்கையின்படி, வரும் 12-ம் தேதி சூரியஅஸ்தமனத்துக்கு பின்னர் இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்று மாலைக்கு பின்னர் அரசுப் படைகளும், போராளி குழுவினரும் ஆயுதங்களை கைவிட்டு, தங்களுக்குள்ளான ஆட்சி மாற்றம் தொடர்பான பிரச்சனைகளுக்கு அரசியல்ரீதியான பேச்சுவார்த்தையின் மூலம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா மற்றும் ரஷியா நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை மந்திரிகள் இன்று வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply