நாளை மாலை முதல் சிரியா முழுவதும் சண்டை நிறுத்தம் அமெரிக்கா, ரஷியா பேச்சில் உடன்பாடு

siriyaசிரியா முழுவதும் நாளை (திங்கட்கிழமை) மாலை முதல் சண்டை நிறுத்தம் செய்வதற்கு, அமெரிக்காவும், ரஷியாவும் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.சண்டை சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. மிதவாத கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவும், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ரஷியாவும் ஆதரவு அளித்து வந்தன.இந்த சண்டையில் சுமார் 3 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். ஏறத்தாழ 7 லட்சம் பேர் இடம் பெயர்ந்தனர்.

 

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 17 நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சண்டை நிறுத்தம் அறிவித்தனர்.

 

ஆனாலும், அலெப்போ நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் இரு தரப்பினரும் உடன்படிக்கையை மீறி மோதல்களில் ஈடுபட்டு வந்தனர்.பேச்சுவார்த்தையில் உடன்பாடு

 

இந்த நிலையில், சிரியா முழுவதும் சண்டை நிறுத்தம் கொண்டு வருவது தொடர்பாக ஜெனீவாவில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியும், ரஷிய வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவும் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

 

இதன்படி நாளை (திங்கட் கிழமை) மாலை முதல் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளில் சிரியா அரசு படைகள் தாக்குதலை நிறுத்திக்கொள்ளும். ஐ.எஸ். இயக்கத்தினருக்கு எதிரான தாக்குதல்களை பொறுத்தமட்டில் அமெரிக்காவும், ரஷியாவும் கூட்டு மையம் ஒன்றை உருவாக்கும்.ஜான் கெர்ரி தகவல்

 

இதுபற்றி ஜெனீவாவில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி கூறுகையில், “இந்த திட்டத்தினை ஏற்று, அதிபர் ஆதரவு படையினரும், கிளர்ச்சியாளர்களும் செயல்பட வேண்டும். அலெப்போ உள்ளிட்ட முற்றுகையுள்ள அனைத்து பகுதிகளுக்கும், சென்றடைய கடினமாக உள்ள பகுதிகளுக்கும் செல்லக்கூடிய வாய்ப்பு உருவாக வேண்டும்” என குறிப்பிட்டார்.

 

சிரியா முழுவதும் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த 7 நாளுக்கு பிறகு, ஐ.எஸ். இயக்கத்தினர் உள்ளிட்ட பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை தொடுப்பதற்கு அமெரிக்காவும், ரஷியாவும் கூட்டு மையத்தை உருவாக்கும்.

 

ரஷிய மந்திரி கருத்து

 

ரஷிய வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோ கருத்து கூறும்போது, “மிதவாத கிளர்ச்சியாளர்களிடம் இருந்து (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை பிரிப்பதற்கு இந்த கூட்டு மையம் உதவும். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும், ரஷியாவும் கூட்டு தாக்குதல்கள் நடத்தும். இதில் சிரியா விமானப்படை இடம் பெறாது. நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளபடி, பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்துகிற பகுதிகளில் அமெரிக்காவும், ரஷியாவும் மட்டுமே ஒருங்கிணைந்த தாக்குதல்கள் நடத்தும்” என குறிப்பிட்டார்.

 

தனது கடமைகளை நிறைவேற்றப்போவதாக சிரியா ஒத்துக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இதே போன்று கிளர்ச்சியாளர்களும் திட்டத்தை ஏற்று செயல்படப்போவதாக கூறி உள்ளனர்.ஐ.நா. வரவேற்பு

 

ஜான் கெர்ரியும், செர்கெய் லாவ்ரோவும் கூட்டாக நிருபர்களிடம் பேசும்போது, “சிரியா முழுமைக்குமான சண்டை நிறுத்த திட்டம், அரசியல் தலைமை மாற்றத்துக்கு வழி வகுக்கும்” என்று கூறினர்.

 

சிரியாவில் முழுமையான சண்டை நிறுத்தம் செய்ய அமெரிக்கா, ரஷியா இடையே உடன்பாடு ஏற்பட்டிருப்பதை சிரியாவுக்கான ஐ.நா. தூதர் ஸ்டாபன் டி மிஸ்துரா வரவேற்றுள்ளார்.

 

சிரியாவில் சண்டையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனித நேய உதவிகளை செய்வதற்கு ஐ.நா. எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என அவர் உறுதிபட தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply