பாதுகாப்பு வலயம் படையினரால் நான்கு முனைகளில் சுற்றிவளைப்பு
அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயப்பகுதியை நான்கு முனைகளினூடாக சுற்றிவளைத்துள்ள படையினர் அப்பகுதியை நோக்கி தீவிர முன்னகர்வு முயற்சியினை மேற்கொண்டு வருகின்றனர் என்று படைத்தரப்பு தெரிவித்தது. இந்நிலையில் பாதுகாப்பு வலயப் பகுதியை அண்டிய பிரதேசங்களில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் படைத்தரப்புக்கு சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் புலிகள் பாரியளவான இழப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் கூறியது.
மோதல்கள் தொடர்பில் ஊடக நிலையம் மேலும் கூறியதாவது
அண்மையில் படையினரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் படையினருக்கு எதிராக பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் மறைந்துள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் மோட்டர் எறிகணை மற்றும் சிறு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் படைத்தரப்புக்கு சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் தொடர்ந்தும் தமது சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த படையினர் விடுதலைப் புலி உறுப்பினர்களின் நான்கு சடலங்கள் உட்பட ஆயுதங்கள் பலவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் கடற்புலிகளின் தற்கொலைப் படகொன்று யுத்த தாங்கி போன்றவற்றையும் கைப்பற்றியுள்ளனர். இதேவேளை பாதுகாப்பு வலயப்பகுதியை நான்கு முனைகளினூடாக சுற்றிவளைத்துள்ள படையினர் பாதுகாப்பு வலயப் பகுதியை அண்மிக்க முடியாதவாறு புலிகளால் அமைக்கப்பட்டுள்ள புதிய மண்மேடுகள் சிலவற்றை இனங்கண்டுள்ளனர்.
அத்துடன் பாதுகாப்பு வலயத்துக்குள் விடுதலைப் புலிகளால் பாரியளவிலான பதுங்கு குழிகள் சிலவும் அமைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்புக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் புலிகளின் இந்த மண்மேடுகளை உடைத்தெறிந்தவாறு பாதுகாப்பு வலயத்துக்குள் முன்னேறி அங்குள்ள பொதுமக்களை மீட்கும் நடவடிக்கள் படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply