கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து வலியுறுத்த வேண்டும் : டாக்டர் ராமதாஸ்
பெங்களூரு கிரி நகரைச் சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர், காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் பக்கம் நியாயம் இருக்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் உள்ள நடிகர்–நடிகைகள் போராடாமல் இருப்பது குறித்தும், கர்நாடகத்தின் பக்கம் நியாயம் இல்லாத நிலையிலும் கன்னட நடிகர்–நடிகைகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருவது குறித்தும் அவரது முகநூலில் பதிவு செய்திருக்கிறார். இதைப் பார்த்த கன்னட வெறியர்கள் சந்தோஷை அவரது வீட்டில் இருந்து கடத்தி வந்து பொது இடத்தில் வைத்து கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.
மேலும் தமிழகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்கும்படியும், கர்நாடகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் படியும் கட்டாயப்படுத்தி, அவர் மன்னிப்பு கேட்கும் காட்சிகளை காணொலியாக பதிவு செய்தும் வெளியிட்டு இருக்கின்றனர். அந்த காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவுகிறது. இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது கர்நாடக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனித நேயத்திற்கும், மனித உரிமைக்கும் எதிரான இச்செயல்களை சகித்துக் கொண்டிருக்க முடியாது.
தமிழ் இளைஞரை தாக்கிய கன்னட வெறியர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படியும், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கும் படியும் கர்நாடக அரசை மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply