புதிய அரசியல் யாப்பின்மூலம் நாட்டை துண்டாட சதி : மகிந்த

MAHINDAபுதிய அரசியல் யாப்பின் மூலம் நாட்டை துண்டாட தற்போதைய மைத்ரி – ரணில் அரசாங்கம் சதித் திட்டம் தீட்டி வருவதாக குற்றம்சாட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 29 ஆயிரம் படையினர் தமது உயிர்களை தியாகம் செய்து மீட்ட நாட்டை துண்டாட இடமளிக்க முடியாது என்றும் சூளுரைத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய மஹிந்த அரசாங்கத்தின் மீது இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதுடன் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு முடிவுகட்ட மக்கள் அணி திரள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவரான கலாநிதி குணதாச அமரசேகர எழுதிய சிறந்த நாட்டை கட்டியழுப்புவதற்கான பயணம் என்ற நூல் அறிமுக விழா நேற்று கொழும்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போதைய மைத்ரி – ரணில் அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன் இந்த அரசாங்கத்தின் நடவடிக்கையால் நாடு பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ச தனதுரையில். “ இன்று நாம் வெளிநாடுகளுக்கு கீழ்படிந்த யுகத்தில் இருப்பதாக நான் கருதுகிறேன். நாம் வெளிநாடுகளுடன் இணைந்து யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான ஆணைக்குழுக்கள் தொடர்பில் நாமே ஆலோசனை முன்வைக்கின்றோம்.

நாம் இணை ஆலோசகராக மாறுகின்றோம். அந்த நிலை இன்று உருவாகியுள்ளது. நாம் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிமன்றத்தை உருவாக்க வேண்டுமென மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவிக்கின்றார்.

இது தொடர்பில் ஆராயுமாறு பணிப்புரை விடுக்கின்றார். பான் கீ மூன் இங்கு வந்து கத்துகிறார். இனவாதத்துடன் இனப்படுகொலை நடைபெற்ற நாடுகளின் பட்டியலில் எம்மையும் இணைக்க அவர் தயாராகின்றார். நாங்கள் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பல தடவைகள் மூன் என்னை சந்தித்திருக்கின்றார். யுத்தத்திற்கு முன்னரும் என்னை சந்தித்தார், பின்னரும் என்னை சந்தித்தார். யுத்ததத்தின் பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் இவ்வாறான ஒரு கதையை கூற முனையவில்லை. இது புதிய கதை எமது நாட்டில் இருந்துகொண்டு எம்மைப் பற்றி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார் என்று தெரிவித்தார்.

நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்காக குரல்கொடுத்தால் அவர்களை இனவாதிகள் என்றும் கடும்போக்காளர்கள் என்றும் முத்திரை குத்தி அரசாங்கம் திட்டமிட்டு ஓரங்கட்டி வருவதாக தெரிவித்த மஹிந்த ராஜபக்ச தனது சூழ்சிகளை தடையின்றி மேற்கொள்வதற்காகவே இவ்வாறு அரசாங்கம் திட்டமிட்டு செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

“ புதிய யாப்பு தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்கத்தை இல்லாமல் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

அரசமர இலைகள் நான்கையும் தேசியக் கொடியில் இருந்து நீக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது? யாப்பில் பௌத்த மதத்திற்கு இருக்கும் இடத்தை இல்லாமல் செய்யக் கோரப்பட்டுள்ளது. இது யாருடைய தேவைக்காக? இது இனவாதத்தை தூண்டும் நடவடிக்கை இல்லையா? மதவாதிகளை தூண்டிவிடுவதற்காகவா இதனை செய்கிறார்கள்? எனக்கு சந்தேகம் எழுகின்றது.

மதம் அல்லது இனம் பற்றி பேசினால் இனவாதிகள் என்கின்றனர். நான் பௌத்தன் என்றால் என்னை இனவாதி என்கின்றனர். இது புதிய நிலை. எவருக்கும் தங்களது கருத்துக்களை வெளியிட உரிமையுள்ளது. இது இனவாதமல்ல. தனது இனத்தை மதத்தை பற்றி கதைக்க, அதனை நேசிக்க அனைவருக்கும் உரிமையுள்ளது என்றே நான் நம்புகின்றேன்.

பெரும்பாலான புத்திஜீவிகள் தற்போது பேசுவதில்லை. தன்மீது ஒரு முத்திரை குத்தப்படும் என்ற பயமே அதற்கு காரணம். இந்த நிலை மாறவேண்டும். தாய்நாட்டிற்காக அனைவரும் ஒன்றிணைய முடியும் பிரச்சினை இல்லை. எனினும் பகுதிகளாக பிரித்து. வேறு ஒரு யுகத்தை உருவாக்கிக்கொள்ள. வேறு ஒரு இராச்சியத்தை தோற்றுவிக்க இடமளிப்பதா என்பது தொடர்பில் பிரச்சினை இருக்கிறது என்றார மஹிந்த.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply