அவசர உதவிகளை விரைவில் விநியோகிக்க ஐ.நா ஏற்பாடு

siriyaசிரியாவில் அமுலுக்கு வந்த யுத்த நிறுத்தம் முதல் நாளில் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்பட்டிருக்கும் நிலையில் முற்றுகையில் இருக்கும் சிரியர்களுக்கு உதவிகளை விநியோகிக்க உதவி லொரிகள் காத்துள்ளன. இந்த அவசர உதவிகளை புதன்கிழமையாகும்போது (நேற்று) விநியோகிக்க தொண்டு அமைப்புகள் எதிர்பார்த்துள்ளன. கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு கிழக்கு அலெப்போவுக்கு செல்லும் வடக்கு சிரியாவின் பிரதான வீதி ஒன்றில் ரஷ்ய படையினர் யுத்த நிறுத்தத்தை கண்காணித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இங்கு சுமார் 250,000 மக்கள் சிக்கியுள்ளனர்.

 

இந்த யுத்த நிறுத்தம் தொடர்ந்து அமுலில் இருந்தால் உதவி விநியோகங்கள் மிக, மிக விரைவில் முன்னெடுக்கப்படும் என்று சிரியாவுக்கான ஐ.நா விசேட தூதுவர் ஸ்டபன் டி மிஸ்டுரா குறிப்பிட்டார்.

 

சிரிய அரசு இந்த விநியோகங்களுக்கு அனுமதி அளிக்கும்வரை காத்திருப்பதாக குறிப்பிட்ட அவர், சிரிய மக்கள் எதிர்காலத்தில் குண்டுகளை அன்றி உதவிகளை பெறுவார்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

 

கடந்த திங்கட்கிழமை சூரிய அஸ்தமனத்துடன் யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் யுத்த நிறுத்தத்தை மீறியதாக அரசு மற்றும் கிளர்ச்சியாளர் இரு தரப்பிடம் இருந்து பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

 

எனினும் இந்த காலத்தில் பொதுமக்களின் உயிரிழப்புகள் நிகழ்ந்ததற்கான எந்த தகவலும் கிடைக்கவில்லை.

 

அமெரிக்க ஆதரவு குழுக்கள் 20க்கும் அதிகமான தடவைகள் யுத்த நிறுத்தத்தை மீறியதாக ரஷ்ய இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இதில் அலெப்போவில் கிளர்ச்சியாளர் பகுதியை அடையும் கஸ்டெல்லோ வீதியில் இரு அரச துருப்பினர் கொல்லப்பட்ட சம்பவமும் அடங்கும்.

 

தமது ஆதரவு தரப்பினரை யுத்த நிறுத்தத்தை மதிக்கச்செய்யும்படி அமெரிக்காவுக்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சு அழுத்தம் கொடுத்துள்ளது.

 

இந்நிலையில் யுத்த நிறுத்தம் மீறப்படுவது குறித்து கண்காணிக்க ரஷ்யா அலெப்போ நகருக்கு உளவு பார்க்கும் உபகரணங்களை அனுப்பியுள்ளது.

 

மறுபுறம் அலெப்போ நகரை ஒட்டிய இரு கிராமங்கள் மற்றும் டமஸ்கஸின் அருகாமை பிரதேசத்தில் சிரிய அரச ஆதரவு படை ஷெல் குண்டுகளை வீசி இருப்பதாக சிரிய மனித உரிமை கண்காணிப்புக் குழு தகவல் அளித்துள்ளது.

 

முன்னதாக ஹமா மாகாணத்தில் வான் தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் அந்த குழு குறிப்பிட்டிருந்தது. சிரிய அரசு மற்றும் ஐ.நாவின் ஒருங்கிணைப்பு இன்றி அலெப்போ நகருக்கு உதவிகள் செல்ல அனுமதிக்கப் போவதில்லை என்று சிரிய அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக துருக்கி அரசின் இவ்வாறான உதவிகளுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

 

எவ்வாறாயினும் சிரியாவில் அமைதி ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்படும் வரை தமது உதவி லொரிகள் முன்னகராது என்று ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

 

“நாம் உள்ளே நுழைய உயிராபத்துகள் இல்லாத சூழல் ஏற்பட வேண்டும்” என்று ஐ.நாவின் மனிதாபிமான அலுவலக பேச்சாளர் ஜேன் லெர்கே குறிப்பிட்டார்.

 

கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு அலெப்போ நகர கவுன்ஸிலின் தலைமை ரோய்ட்டர்ஸுக்கு அளித்த தகவலில், அங்குள்ள மக்களுக்கு எரிபொருள், மா, கோதுமை, புட்டிப்பால் மற்றும் மருந்து பொருட்களின் அவசிய தேவை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

கஸ்டெல்லா வீதி இராணுவமயமற்ற பகுதியாக மாற்றப்பட வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி கடந்த வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்திருந்தார். அலெப்போவுக்கு உதவிகள் அடைய பாதுகாப்பான வழியை ஏற்படுத்த அமெரிக்கா ரஷ்யாவுடன் இணைந்து செயற்படுவதாக அவர் கூறினார்.

 

அமுலில் இருக்கும் யுத்த நிறுத்தம் ஏழு தினங்களுக்கு நாடெங்கும் கடைப்பிடிக்கப்படும் என்று சிரிய இராணுவம் அறிவித்தது. எனினும் ஆயுதக் குழுக்களின் எந்த ஒரு வன்முறைக்கும் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது கூறியது.

 

பெரும்பாலான கிளர்ச்சியாளர்களும் இந்த யுத்த நிறுத்தத்தை வரவேற்ற போதும், அதனை கடைப்பிடிப்பது குறித்து அவதானத்தை வெளியிட்டிருந்தன.

 

சுதந்திர சிரிய இராணுவம் உட்பட 21 அரச எதிர்ப்பு தரப்புகள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “எம்மிடையே பிளவை ஏற்படுத்தி மோதலுக்கு இட்டுச் செல்வது அல்லது எம்மை சலுகை எனும் புதைகுழிக்குள் மூழ்கடிக்கச் செய்யும் சதிகள் குறித்து நாம் அவதானத்துடனேயே இருக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அத்துடன் ஜபத் பதாஹ் அல் ஷாம் (அல் நுஸ்ரா என்று அறியப்பட்டு அண்மையில் பெயர் மாற்றிக்கொண்டது) இலக்கு வைக்கப்படுவதை தாம் எதிர்ப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அல் கொய்தாவில் இருந்து அண்மையில் பிரிந்த இந்த குழு இலக்கு வைக்கப்படுவது, புரட்சிப் படையின் பலத்தை குறைத்து அஸாத் அரசு மற்றும் அதன் கூட்டணியை வலுப்பெறச் செய்யும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

யுத்த நிறுத்தம் ஏழு தினங்களுக்கு அமுலில் இருக்கும் பட்சத்தில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா கூட்டாக இணைந்து இஸ்லாமிய தேசம் மற்றும் ஜபத் பதாஹ் அல் ஷாம் ஆயுதக் குழுக்கள் மீது வான் தாக்குதல்களை நடத்தவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

 

2011 மார்ச் மாதம் மோதல் ஆரம்பமானது தொடக்கம் இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 300,000ஐ கடந்திருப்பதாக சிரிய மனித உரிமை கண்காணிப்புக் குழு தரவுகள் குறிப்பிடுகின்றன. எனினும் இந்த யுத்தத்தில் மொத்த உயிரிழப்பு சுமார் 430,000ஐ எட்டி இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

 

4.8 மில்லியனுக்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருப்பதோடு மேலும் 6.5 மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழ்வதாக ஐ.நா குறிப்பிடுகிறது.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply