பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு லிபிய தலைவர் கடாபி பாராட்டு
ஜனாதிபதி மஹிந்தவுடனான சந்திப்பில் இருதரப்பு உறவுகள் குறித்து உடன்பாடு
லிபியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டு ஜனாதிபதி கேர்ணல் முஅம்மர் அபூ மின்பர் கடாபியைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார்.இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை ஒரு மணிக்கு லிபியாவில் விசேட அரச தலைவர்களுக்கென அமைக்கப்பட்டிருக்கும் கூடாரத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.
இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக வர்த்தக, பொருளாதார உறவுகளை வலுப்படுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதற்கமைய, லிபிய நாட்டில் ஒரு லட்சம் வேலை வாய்ப்புக்களை இலங்கையருக்குப் பெற்றுக்கொடுக்க லிபியா முன்வந்துள்ளது.
லிபிய ஜனாதிபதி கடாபியும், பிரதமர் அல் பதாத் அலி அல் மஃமூத்தும் இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் இந்த வருட இறுதிக்குள் இரு நாடுகளுக்குமிடையில் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், லிபிய சந்தையில் இலங்கைத் தேயிலைக்கு கூடுதல் வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.லிபிய ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது இலங்கை மக்களை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுப்பதற்கும் மற்றும் வடபகுதி மக்களின் மனிதாபிமானத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்துரைத்துள்ளார்.
இதன் போது, உலகிலேயே கொடிய பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் இலங்கையின் அனுபவங்களைத் தெரிந்துகொள்ளுவதற்கு லிபிய ஜனாதிபதி ஆர்வம் காட்டினார்.முழு உலகுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்து இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்றிட்டத்தின் வெற்றிகரமான முடிவுக்கு அண்மித்துள்ளமை மற்றும் துரிதமான அபிவிருத்தியை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளமையையிட்டு லிபிய ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதிக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கைக்குக் கிடைத்த அனுபவம் முழு உலகுக்கும் ஒரு முன்மாதிரியாகும் என்று தெரிவித்த லிபிய ஜனாதிபதி இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளின் உட்கட்டமைப்பு வளங்களை மேம்படுத்த தனது அரசாங்கம் ஒத்துழைப்புக்களை நல்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பும் 1976 ம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த லிபிய ஜனாதிபதி அப்போது ஒரு இளம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஏற்படுத்திக் கொண்ட நட்புறவை மேலும் பலப்படுத்திக் கொள்ளுவதற்கு ஜனாதிபதியின் இந்த லிபிய விஜயம் வழி வகுத்துள்ளது. அத்துடன், இரு நாடுகளினதும் தேசியக் கொடிகளாலும் மின் விளக்குகளாலும் லிபிய நகரங்களும், வீதிகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தமை, அரச தலைவர் ஒருவருக்கு வழங்கக் கூடிய ஒரு உயர் கெளரவத்து டன் ஜனாதிபதிக்கும் தூதுக் குழுவினருக்கும் விருந்துபசாரம் அளித்து உபசரித்தமை முக்கிய அம்சமாகும்.
மேலும், சுகாதாரத் துறையில் இலங்கை மருத்துவர்களுக்கும், தாதியர்களுக்கும் லிபியாவில் தொழில் வழங்குவதுடன், நிர்மாண மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் கூடுதல் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க லிபியா இணக்கம் தெரிவித்துள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று முன்தினம் (08) அந்நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தார். லிபிய பிரதமர் அல் பதாத் அலி அல் மஹ்மூ த்தை ஜனாதிபதி நேற்று முன்தினம் சந்தித்தார்.
இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்படும் மூன்று முக்கிய உடன்படிக்கைகள் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக உட்கட்டமைப்பு வளங்களை மேம்படுத்தல், தொழில்நுட்பத் துறை மற்றும் நிபுணத்துவ பரிமாற்றம், தொழில்வாண்மையாளர்கள் பரிமாற்றம் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது. அதுபோல், பொருளாதார வர்த்தக ஒத்துழைப்புகளை இரு நாடுகளுக்குமிடையில் விரிவுபடுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. தவிரவும் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கும் இலங்கையில் தொலைத் தொடர்புத் துறை அபிவிருத்திக்கு லிபியாவின் தொழில் நுட்பத்தையும் நிதி உதவியையும் பெற்றுக்கொடுக்கவும் லிபியா இணக்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, வடக்கு கிழக்குப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வளங்களை மேம்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் லிபியா இணங்கியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி நடத்திய பேச்சுவார்த்தையில் அவருடன், வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, மத்திய மாகாண அமைச்சர் சரத் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் வெளிவிவகார இணைப்புச் செயலாளர் சஜின் வாஸ் குணவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply