நாம் தமிழர் கட்சி ஊர்வலத்தில் தீக்குளித்த வாலிபர் மரணம்: சீமான் அஞ்சலி

seemanகர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் எழும்பூரில் நேற்று மாலை காவிரி உரிமை மீட்பு பேரணி நடந்தது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த இந்த பேரணியில் சினிமா டைரக்டர்கள் அமீர், சேரன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர்.

ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இருந்து பேரணி புறப்பட்டது. புதுப்பேட்டை கூவம் கரையோரம் உள்ள சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து அங்கு மேடையும் அமைக்கப்பட்டிருந்தது.

புதுப்பேட்டை பகுதியில் ஊர்வலம் வந்தபோது, திடீரென விக்னேஷ் என்ற வாலிபர் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். உடல் முழுவதும் தீப்பற்றி எறிந்த நிலையில் சாலையில் அவர் அங்கும் இங்கும் ஓடினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஊர்வலத்தில் சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், மரக்கிளை களை வைத்தும், தாங்கள் கையில் கொண்டு சென்ற பதாகைகளை வைத்தும் தீயை அணைத்தனர். இருப்பினும் வாலிபரின் உடல் கருகியது.

அங்கிருந்த போலீஸ் ஜீப்பில் ஏற்றி, விக்னேஷை சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

93 சதவீத தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்ட விக்னேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நிலைமை கவலைக் கிடமாக இருந்தது. நினைவு இழந்த நிலையில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

இன்று காலை 11 மணிக்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக இறந்தார்.

தகவல் கிடைத்ததும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மனைவி கயல்விழி மற்றும் தொண்டர்களுடன் ஆஸ்பத்திரிக்கு வந்து விக்னேஷ் உடலை பார்த்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

விக்னேஷ் மரணத்தை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக முத்துக்குமார், செங்கொடி ஆகியோர் உயிர்தியாகம் செய்தனர். அப்போதே உணர்ச்சி வசப்பட்டு தமிழ் இளைஞர்கள் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று கூறினேன். தொடர்ந்து அறிவுறுத்தியும் வந்துள்ளேன்.

இப்போது காவிரி பிரச்சினை கர்நாடகாவில் கொளுந்து விட்டு எரிந்த தாலேயே இங்குள்ள இளைஞர்கள் உணர்ச்சி மயமாக இருந்தனர். அது போன்ற மனநிலையில் இருந்ததாலேயே விக்னேஷ் தன்னை வருத்திக் கொண்டு உடலில் தீ வைத்து உயிரிழந்துள்ளார்.

இந்தியாவில் உள்ள வளங்கள் அனைத்துமே அனைவருக்கும் சொந்தம். ஆனால் தமிழர்கள் தொடர்ந்து தங்களது உரிமைக்காக வஞ்சிக்கப்படும் நிலை இருந்து வருகிறது.

இந்த சம்பவத்துக்கு பிறகாவது மத்திய-மாநில அரசுகள் காவிரி பிரச்சினையில் செவி சாய்க்குமா? என்பதும் சந்தேகமே.

காவிரி தண்ணீரும் இல்லை. அதற்காக களப்பணியாற்றிய தம்பியும் எங்களோடு இல்லை. அதை நினைத்தாலே மிகவும் வேதனையாக உள்ளது.

எனவே தமிழ் உணர்வுள்ள இளைஞர்கள் இதற்கு மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். தங்களது எண்ணங்களையும் கோரிக்கைகளையும் வலுவான போராட்டங்கள் மூலமாகவே இனி வரும் காலங்களில் அவர்கள் முன் எடுத்து செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விக்னேசின் சொந்த ஊர் மன்னார்குடி அருகே உள்ள கோபால சமுத்திரமாகும். சென்னை அம்பத்தூரில் தங்கி பணிபுரிந்து வந்தார்.

நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவர் பாசறை செயலாளராக பணியாற்றினார். தீவிர தமிழ் ஆர்வலராக இருந்து வந்தார்.

விக்னேஷ் தீக்குளித்த தகவல் அறிந்து அவரது தந்தை பாண்டியன், தாய் செண்பகலட்சுமி, அக்காள் ஜனனி ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று இரவு 1 மணி அளவில் சென்னை வந்தனர். மகன் உடலை பார்த்து கண்ணீர் வடித்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின் விக்னேஷ் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர்கள் உடலை பெற்றுக் கொண்டு சொந்த ஊர் எடுத்துச் சென்று மூவாநல்லூர் மயானத்தில் தகனம் செய்கிறார்கள்.

தீக்குளிப்பதற்கு முன்னர் விக்னேஷ் மாணவர்களுக்கு கடிதம் ஒன்றையும் எழுதி இருக்கிறார். அதில், காவிரி நீரை மீட்டெடுக்க போராடுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன் எச்சரிக்கையாக ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். சென்னை மாநகரம் முழுவதும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. விக்னேசின் சொந்த ஊரான மன்னார்குடியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக நேற்று இரவு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply