உரி தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: பிரதமர் மோடி

modiஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் ஜீலம் நதிக்கரையோரம் உரி என்ற முக்கிய நகரம் அமைந்துள்ளது. உரி நகரில் அப்பகுதியில் பணியாற்றும் ராணுவ படைப்பிரிவினருக்கான தலைமை முகாம் ஒன்று இயங்கி வருகிறது.இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த முகாமுக்கு அரணாக அமைக்கப்பட்டுள்ள கம்பிவேலியை வெட்டிவிட்டு முகாமுக்குள் ஆயுதமேந்திய உள்ளூர் தீவிரவாதிகள் நுழைந்தனர்.

முகாமின் மீது வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் ஆவேசமாக தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த ராணுவ வீரர்களும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர்.

இருதரப்பினருக்கும் இடையில் அங்கு நடந்த துப்பாக்கிச் சண்டையில் 17 வீரர்கள் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், உரி பகுதியில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’உரி பகுதியில் நடத்தப்பட்டுள்ள கோழைத்தனமான இந்த தீவிரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது.

இன்றைய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவத்தினருக்கு எனது சிரம்தாழ்ந்த வணக்கத்தை காணிக்கையாக்குகிறேன். இந்த நாட்டுக்கு அவர்கள் ஆற்றியுள்ள சேவை என்றென்றும் நினைவுக்கொள்ளத்தக்கதாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

இதேபோல், உரி தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லியில் இன்று நடைபெற்றுவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற சீத்தாராம் யெச்சூரியும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply