போரஸ் மன்னனை அலெக்சாண்டர் நடத்தியதைப்போல் நடத்த முன் வருக!
இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்தக் கோரி சென்னையில் திமுக சார்பில் தமிழர் பேரணி நேற்று (ஏப். 9) நடைபெற்றது. இந்த பேரணி, மன்றோ சிலையில் தொடங்கி, சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகே முடிவடைந்தது. பேரணியை பார்வையிட்டு முடித்த பிறகு, முதலமைச்சர் கருணாநிதி பேசியதாவது;
இங்கு உரையாற்றியவர்கள் எல்லாம் வழிசொல், வழிசொல் என்று எனக்கு ஆணையிட்டு இருக்கிறார்கள். எவ்வழியை நான் கண்டுபிடித்து சொல்வதென்று புரியாத நிலையில் குழம்பி தவிக்கிறேன். ஏனென்றால், ஏறத்தாழ் 50 அல்லது 60 ஆண்டு காலமாக, இந்த பிரச்சினை, அறிஞர் அண்ணா, பெரியார் ஆகியோருடைய காலத்தில் இருந்து ஈடுபடுத்தி கொண்டவன் என்ற முறையில் ஒவ்வொரு காலத்திலும் இலங்கையில் நடைபெறுகின்ற கொடுமைகளை கண்டிக்கும் நிலையிலும் அங்கே விழுகின்ற தமிழர்களுடைய பிணங்களைப் பார்த்து, கண்ணீர் உகுக்கின்ற நிலையிலும், இலங்கையோடு எனக்கு தொடர்பு உண்டு.
இலங்கைக்கு நான் செல்வதற்கு அங்கேயிருந்த அப்போதைய அரசுகள் தடை விதித்தபோதும், இலங்கையில் தமிழர்களுக்கு காவலர்களாக, தூதுவர்களாக இருக்கின்ற நண்பர்களுக்கெல்லாம் நான் தோழனாக இருக்கிறேன். அந்த வகையில் இலங்கை பிரச்சினை எனக்கு புதிய பிரச்சினை அல்ல. நானும் பேராசிரியரும் இந்த இலங்கை பிரச்சினைக்கு எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை துறந்தோம் என்று இங்கே திருமாவளவன் குறிப்பிட்டார். ஆனால், இப்போது சில பேர் ஏன் இலங்கை பிரச்சினைக்காக ஆட்சியை துறக்க கூடாது என்று என்னை பார்த்து கேட்கிறார்கள். ஆட்சியை துறக்காமல் இருப்பதற்கு காரணம், எனக்காக துறக்காமல் இல்லை, கேட்பவர்களுக்காகத்தான் ஆட்சியை நான் துறக்காமல் இருக்கிறேன்.
நான் மாநில ஆட்சியை துறந்து, மத்திய அரசு, நேரடியாக தமிழகத்தை ஆளுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்குமேயானால், குடியரசு தலைவருடைய ஆட்சி நேரடியாக ஏற்பட்டிருக்குமே ஆனால் இவர்கள் பேசுகின்ற பேச்சுகளுக்கு, இறையாண்மைக்கு விரோதமாக, திருமதி சோனியா காந்தியை இழித்தும் பழித்தும் பேசுகின்ற இந்த பேச்சுகளுக்கு எத்தனை ஆண்டுக்காலம் சிறைத்தண்டனை கிடைத்திருக்கும் என்பதையெல்லாம் நான் எண்ணிப் பார்க்கிறேன். எனவே இவர்களை காப்பாற்றுவதற்காகத்தான் நான் ஆட்சியை இழக்கவில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இந்த போரில் போர் நிறுத்தம் ஏற்பட்டால், ஒரு வேளை ஏற்படாவிட்டால், ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் என்ன முடிவாக இருக்கும்? அது இங்கே சட்டமன்றத்திலே சில ஆண்டுகளுக்கு முன்பு அம்மையார் ஜெயலலிதா ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினாரே, அந்தத் தீர்மானத்தை போல பிரபாகரனை கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிப்பதாக இருக்கும்.
இதைத்தான் ஜெயலலிதா, முதலமைச்சராக இருந்தபோது தீர்மானமாக முன் மொழிந்து அதை நிறைவேற்றினார்கள். இந்த போரின் முடிவு நமக்கு தோல்வியாக இருந்தால், தமிழர்களுக்கு தோல்வியாக இருந்தால், பிரபாகரன் தலைமையிலே உள்ள அந்த புலிகளுக்கு தோல்வியாக இருந்தால், ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானப்படி இங்கே பிரபாகரனை அழைத்து வந்து தண்டனை கொடுக்க வேண்டும்.
நான் இப்போதும் கேட்கின்றேன். ராஜபக்சேவுக்கு சொல்கிறேன். சரித்திரத்தை புரட்டிப் பாருங்கள்.
இந்திய சரித்திரத்தில் அலெக்சாண்டர் படையெடுத்து வந்தபோது, அக்ரோணி கணக்கிலே சைனியங்களையெல்லாம் அழித்து, பல நாடுகளை கவர்ந்து, பல பூமிகளை தன்னுடைய காலடியிலே போட்டு மிதித்து வந்தபோது, போரஸ் மன்னன் எதிர்ப்பை துச்சமாக கருதி `போரஸ்’ என்று அழைக்கப்பட்ட புருஷோத்தமனை வென்றபோது, பெருந்தன்மையோடு கேட்டான்- உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று அந்த நிலையிலும் போரஸ் மன்னன், “என்னை ஒரு மன்னனைப் போல் நடத்த வேண்டும்” என்று சொன்னான். அவனுடைய பெருந்தன்மைக்கு- அலெக்சாண்டரின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டாக-அலெக்சாண்டர், போரஸ் மன்னனின் வீரத்தை பாராட்டி, தனக்கு நிகராக, தனக்கு சமமாக ஒரு மன்னனாக உட்கார வைத்தான்.
போரின் முடிவு எப்படியிருந்தாலும், ராஜபக்சே எண்ணுவதைப்போல இருந்தாலும், நான் தமிழ் மக்கள் சார்பாக சொல்லுகிறேன், போரின் முடிவில் பிரபாகரனின் படைக்கு அழிவு ஏற்பட்டாலும், பிரபாகரன் தோல்வியுறுத்தாலும், போரஸ் மன்னனை அலெக்சாண்டர் நடத்தியதைப்போல் நடத்த முன்வருக என்று ராஜபக்சேவுக்கு நான் எங்கள் தமிழர்களின் நலன் கருதி சொல்லி கொள்கிறேன்.
இது தனிப்பட்ட ஒரு பிரபாகரனுக்காக சொல்லப்படுவதல்ல, கடந்த காலத்திலே ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் மத்திய அரசு அண்மையிலே வெளியிட்ட கருத்துக்கள், பிரணாப் முகர்ஜி வெளியிட்ட கருத்தானாலும், குடியரசு தலைவர் வெளியிட்ட கருத்தானாலும், அதைத் தொடர்ந்து சோனியா காந்தி வெளியிட்ட கருத்தானாலும், இந்திய பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்ட கருத்தானாலும், இந்த கருத்துக்கள் எல்லாம் தமிழர்களை, தமிழ் மக்களை சம அதிகாரம் கொடுத்து அவர்களுக்கு ஆட்சியிலே சம சுதந்திரம் கொடுத்து அவர்களை நடத்த வேண்டும் என்ற கருத்துத்தான். இவ்வாறு கருணாநிதி பேசினார்.
பேரணியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, நிதியமைச்சர் அன்பழகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை. ஜெகன்மூர்த்தி ஆகியோரும் பேசினார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply