தாஜுதீனின் உடற்பாகங்கள் மாலபே மருத்துவ கல்லூரிக்கு அனுப்பப்பட்டமை ஊர்ஜிதம்

thasudinகொழும்பு பிரதம சட்ட மருத்துவ அதிகாரியாக பேராசிரியர் ஆனந்த சமரசேகர கடமையாற்றிய காலப் பகுதியில் முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் உள்ளிட்ட உயிரிழந்த பலரின் உடற் பாகங்கள் மாலபேயிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு (SAITM) அனுப்பி வைக்கப்பட்டிருப்பது விசாரணைகள் மூலம் ஊர்ஜிதமாகியிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (சி. ஐ. டி) நேற்று (21)நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

 

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (21) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உயிரிழப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான பிரதம இன்ஸ்பெக்டர் ரவீந்திர விமலசிறி, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிசிடம் இது பற்றி கூறினார்.

 

இதேவேளை, மேற்படி உடற் பாகங்கள் அடங்கிய 15 பொதிகள் கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியின் பிரேத அறையிலிருந்து வாகனமொன்றின் மூலம் மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை தெரிய வந்திருப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

 

கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவரே விசாரணைகளின் போது மேற்படி வாக்குமூலம் அளித்ததாகவும் பிரதம இன்ஸ்பெக்டர் விமலசிறி தெரிவித்தார். சம்பவ தினத்தன்று ஜனாதிபதி செயலகத்திலிருந்து ஏற்படுத்தப்பட்ட அழைப்பு தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சி. ஐ. டி. நீதிமன்றத்தில் கூறியது.

 

கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் நேற்று வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட தினத்தன்று ஜனாதிபதி செயலகத்திலிருந்து ஏற்படுத்தப்பட்ட அழைப்பு தொடர்பில் நடாத்தப்படும் சோதனைகளுக்கு ஒத்துழைக்குமாறும் தனியார் நிறுவனமொன்றின் மென்பொருள் பொறியியலாளர் ஒருவருக்கு பணிப்புரை விடுத்தார்.

 

இவ்விசாரணைகளின் போதே தாஜுதீன் கொலை வழக்குடன் சம்பந்தப்பட்டதாக ஏற்கனவே கைதுசெய்யப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அநுர சேனாநாயக்க மற்றும் முன்னாள் நாரஹேன்பிட்டியவின் குற்றச் செயல்களுக்கான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரா ஆகியோரின் விளக்கமறியல் ஒக்டோபர் 05 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பு மேலதிக நீதவான் நேற்று அறிவித்தார்.

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply