எழுக தமிழ்’ ஆர்ப்பாட்ட பேரணி தமிழரின் சிந்தனை அல்ல

ranjan வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் செயற்பாடுகள் தேர்தலில் வாக்குகளை சுவீகரிக்கும் நோக்கத்தைக் கொண்டது. இச்செயற்பாடுகளை அடிப்படையாக வைத்து மீண்டுமொரு யுத்தத்தை ஆரம்பிக்கவோ அல்லது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் ஒரங்கட்டுவதற்கோ அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லையென சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

 

வடக்கில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியானது தமிழ் தேசியக் கூட்டமைப்பினதோ அல்லது தமிழ் மக்களினதோ சிந்தனை கருத்துக்கள் அல்ல. இதனால் தெற்கிலுள்ள மக்கள் இப்பேரணியையிட்டு குழப்பமடையத் தேவையில்லை என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

இதேவேளை, வடக்கில் புத்த விகாரைகள் மற்றும் உருவச் சிலைகள் அமைக்க கூடாது என்ற கோரிக்கையை தவிர்ந்த முதலமைச்சரின் ஏனைய கோரிக்கைகளுக்கு தான் உடன்படுவதாகவும் புத்த விகாரைகளையும் உருவச் சிலை களையும் வடக்கிலிருந்து அகற்றுவதற்கு தான் ஒருபோதும் இணங்கப் போவதில்லையென்றும் அவர் அழுத்தமாக கூறினார்.

 

சிறிகொத்தவில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

“வடக்கில் புத்தர் சிலைகளை வைக்க கூடாது விகாரைகளை அமைக்க கூடாதென கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை. அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் தம்மை அமெரிக்கர்கள் என்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் தம்மை அவுஸ்திரேலியர்கள் என்றும் கூறிக் கொள்ளும் போது ஏன் நாம் மட்டும் இலங்கையர்கள் என பெருமையாக எம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது. இலங்கையர்களாகிய நாம் ஒரு இலங்கையில் வாழ்கின்றோம். இந் நாட்டின் அனைத்து இடங்களும் அனைவருக்கும் சொந்தமானது.” என்றும் அவர் தெரிவித்தார்.

 

“கொழும்பிலும் தெற்கிலும் சிங்களவர்களும் தமிழர்களும் நல்லிணக்கத்துடன் வாழ்கிறார்கள். நாம் கோயில்களுக்கு செல்கின்றோம். கிரிக்கெட் விளையாட்டு வீரரான முத்தையா முரளீதரனுடன் ஒன்றாக வேலை செய்கின்றோம். தமிழ் அரசியல்வாதியான முன்னாள் வெளிவிகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை பிரதமராக தெரிவு செய்வதற்கு முன்மொழிந்திருந்தோம்.

 

தென்னிந்திய தமிழ் படங்களையே நாம் சிங்களத்தில் நடிக்கின்றோம், தமிழ் சினிமா நடிகர்களான ரஜனிகாந்த், கமல்ஹாசன் மற்றும் தயாரிப்பாளர் சங்கர் ஆகியோரை சந்தித்து வருகின்றோம். தமிழ் இனத்தைச் சேர்ந்த கதாநாயகி பூஜா உமாசங்கரே சிங்கள திரையுலகில் தற்போது முன்னணியில் இருக்கிறார்.

 

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைக்கிறோம், கதிர்காமத்துக்கு சென்று வருகிறோம். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் முதலமைச்சர் கூறுவதன்படி வடக்கில் சிங்களவர்களோ பௌத்த மதமோ இருக்கக் கூடாது என்றால் தெற்கிலிருக்கும் தமிழர்களையும் வடக்கிற்கே அனுப்ப நேரிடும். ஆனால் கனவிலும் அப்படியானதொரு நிலை உருவாகுவதனை நாம் விரும்பவில்லை. கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் எவருக்கும் உண்டு.

 

முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் செயற்பாடுகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு நாம் தமிழ் மக்கள் மீது எவ்வித தீர்மானத்தையும் முன்னெடுக்க முடியாது. தமிழர்கள் எமக்கு மிகவும் நெருக்கமானவர்கள்” என்றும் கூறினார்.

 

கடந்த அரசாங்கத்தில் தமது கருத்துக்களை வெளியிடுவதற்காக ஊர்வலம் சென்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தில் அவ்வாறான நிலை உருவாகது. இங்கிலாந்தின் ‘ஹைட்பார்க்’ எனும் இடத்தில் 05 பவுண்களை வழங்கி எவர் வேண்டுமானாலும் தமது மனம் திருப்தி அடையும் வரை எலிசபெத் மகாராணி உள்ளிட்ட எவரையும் தகாத வார்த்தைகளால் தூற்றமுடியும்.

 

அதே நடைமுறை இலங்கையிலும் கொண்டுவரப்பட வேண்டுமென்பதே எனது விருப்பமுமாகும். அதே பாணியில் தான் முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் ஆதங்கங்களை வெளிக்கொணர்வதற்கும் இந்த அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

இதேவேளை மோதல்களின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை வேண்டுமென முதலமைச்சர் முன்வைக்கும் கோரிக்கையினை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

 

அதற்காக நான் இராணுவ வீரர்களுக்கு எதிரானவன் அல்ல.

 

இராணுவத்தினர் யுத்தம் என்ற பெயரை காரணமாக கொண்டு தவறான செய்கைகளை முன்னெடுப்பது சட்டப்படி குற்றமாகும். இதற்கு உடன்பட முடியாது. இராணுவ வீரர்களுக்கு எவரையும் கடத்துவதற்கோ கொல்வதற்கோ தனது மனைவியை சுடுவதற்கோ கூட அனுமதி இல்லை. இவ்வாறான சம்பவங்கள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

இச்செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் கூறியதாவது, நல்லாட்சி அரசாங்கத்தைச் சேர்ந்த பிரதி அமைச்சரொருவர் விரைவில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட இருப்பதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராநமயக்க நேற்று பகிரக்கமாகத் தெரிவித்தார்.

 

விசாரணைகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் அவரை செய்வது மாத்திரமே பாக்கியாகியிருப்பதாகவும் அதுவரை குறித்த நபரின் பெயரை தான் வெளியிட விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

 

இதேவேளை, அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட 15 பேரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பல்வேறு முறைப்பாடுகள் தொடர்பில் இதுவரை விசாரணை செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

 

அமைச்சர் ராஜித இதுவரை 03 தடவைகள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு சமூகமளித்துள்ளார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply