அபிவிருத்திகளுக்காக மாகாண காணிகளை மத்திய அரசுக்கு வழங்க முடியாது

vikiஅபிவிருத்தி தேவைகளுக்கான காணிகளை மாகாண அரசாங்கம் மத்திய அரசுக்கு உரிமத்துடன் வழங்க முடியாது எனவும் அக்காணிகள் எதிர்காலத்தில் வேறு தேவைகளுக்கு பயன்படக் கூடும் எனவும் வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நேற்று (26) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத் தலைவர்களான வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்ட நிகழ்ச்சி நிரலில் இருபத்தெட்டு விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது.எனினும் நீர்வழங்கல், மின்சாரம், வீதி, மீன்பிடி,விவசாயம், சுகாதாரம்,கல்வி, போக்குவரத்து, ஆகிய எட்டு விடயங்கள் மாத்திரமே கூட்டத்தில் ஆராயப்பட்டது.

 

அபிவிருத்திப் பணிகள் மற்றும் அதன் குறைநிறைகள் குறித்து இங்கு விஷேடமாக கலந்துரையாடப்பட்டது.

 

இதன் போது கருத்து தெரிவித்த முதலமைச்சர்: மத்திய அரசு மாகாண அரசுக்கோ, மாவட்டச் செயலகங்களுக்கோ தெரியாது பல பணிகளை முன்னெடுத்து வந்துள்ளது. அபிவிருத்தி திட்டங்களுக்காக மாகாண அரசுக்கான காணிகளை மத்திய அரசுக்கு உரிமத்துடன் வழங்க முடியாது. அவ்வாறு வழங்குதல் எதிர்காலத்தில் வேறு பல பிரச்சினைகளை கொண்டு வரக்கூடும். அதாவது மத்திய அரசால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகள் வெற்றியளிக்கவில்லை என்றுக் கூறிவிட்டு அவர்கள் வேறு தேவைகளுக்கு காணிகளை பயன்படுத்த முடியும்.

 

இது விரும்பத்தக்கது அல்ல எனவும் அவர் தெரிவித்தார். மேலும் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான காணியை மாங்குளத்தில் நீண்ட கால குத்தகைக்கு தரலாம் என்றே நாங்கள் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வட மாகாண அமைச்சர்களான டெனீஸ்வரன், ஜங்கரநேசன்,சத்தியலிங்கம், குருகுலராஜா மாகாண சபை உறுப்பினர்களான தவநாதன், அரியரட்னம் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply