பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது உண்மைதான் நேரில் பார்த்தவர்கள் பரபரப்பு தகவல்
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது உண்மைதான் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.இந்திய ராணுவம் அதிரடி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவம் கடந்த 28–ந்தேதி நள்ளிரவு ஊடுருவி மறுநாள் காலை 4.30 மணிவரை பயங்கரவாதிகள் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் துவம்சம் செய்யப்பட்டதாகவும் ராணுவம் அறிவித்தது.‘சர்ஜிகல்’ தாக்குதல் என்று இதற்கு இந்திய ராணுவம் பெயர் சூட்டியது. ஆனால் இப்படியொரு தாக்குதல் நடத்தப்படவில்லை என்று பாகிஸ்தான் மறுத்து வருகிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகள் இது தொடர்பான ஆதாரங்களை வெளியிடவேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன.தாக்குதல் நடந்தது உண்மை
இந்த நிலையில், இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது உண்மைதான் என்பதையும், இந்த தாக்குதலுக்கு பின்பு நடந்த நிகழ்வுகளையும் காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகே இந்திய எல்லையையொட்டி வசிப்பவர்கள் ஊடகங்களிடம் உறுதி செய்துள்ளனர்.இதுபற்றி தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், ‘‘காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே 4 கி.மீ. தொலைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் எல்லைக்குள் லஷ்கர் இ–தொய்பா பயங்கரவாத முகாம் துனியால் என்ற கிராமத்தில் செயல்பட்டு வந்தது. இந்த முகாம் இந்திய ராணுவ வீரர்களால் அடியோடு தகர்க்கப்பட்டது’’ என்றார்.குண்டு வெடிக்கும் சத்தம்
தாக்குதலை நேரில் கண்ட இன்னொருவர், ‘‘இந்திய ராணுவ நடவடிக்கையின்போது, எல்லைக்கு அப்பால் உள்ள அல்ஹாவி என்ற கிராமத்தின் பாலம் அருகில் இருந்து அதன் முக்கிய பஜார் பகுதி வரை தீப்பிடித்து எரிந்தது. தாக்குதல் நடத்தப்பட்ட அன்று நள்ளிரவு தொடர்ந்து குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. அதே நேரம் அப்பகுதியை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தும் சத்தமும் கேட்டது’’ என்று தெரிவித்தார்.பிணங்களை டிரக்கில் ஏற்றினர்
தாக்குதல் நடத்தப்பட்ட எல்லையோரப் பகுதியில் வசிப்போர் கூறும்போது, ‘‘நீலம் நதிக்கு அருகே இயங்கி வந்த லஷ்கர் இ–தொய்பா பயங்கரவாதிகள் முகாம் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. மறுநாள் காலை 5 முதல் 6 வரையிலான பிணங்களை ஒரு டிரக்கில் ஏற்றிக் கொண்டு பயங்கரவாதிகள் சல்ஹானா பகுதியில் உள்ள தங்களுடைய பெரிய முகாமிற்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அந்த உடல்கள் எங்கே புதைக்கப்பட்டன என்பது தெரியவில்லை’’ என்றார்.இதேபோல் குவாசி நாக் என்னும் நீரோடை அடிவாரப்பகுதியில் 25 குக்கிராமங்கள் அடங்கிய லீபா என்ற இடத்தில் அமைந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய பகுதியான நவ்காம் மலை உச்சியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தாக்குதலை நேரில் பார்த்த இன்னொருவர் குறிப்பிட்டார்.தாக்குதலுக்கு பின் நடந்த சம்பவங்களை நேரில் பார்த்த மற்றொருவர் கூறியதாவது:–பயங்கரவாதிகள் சபதம்
பாகிஸ்தானில் உள்ள அத்முகும் நகரில் உள்ள நீலும் மாவட்ட ஆஸ்பத்திரிக்கு இந்திய ராணுவ நடவடிக்கையின்போது கொல்லப்பட்ட லஷ்கர் இ–தொய்பா பயங்கரவாதிகள் உடல்கள் கொண்டு வரப்பட்டது. காயம் அடைந்த பயங்கரவாதிகளும் அங்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும் பலியான பயங்கரவாதிகள் யாரும் அத்முகும் சுற்று வட்டப் பகுதியில் அடக்கம் செய்யப்படவில்லை. அவர்களுடைய உடல்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டது என்று தெரியவில்லை.இந்திய ராணுவத் தாக்குதலுக்கு பின்பு, லஷ்கர் இ–தொய்பா பயங்கரவாதிகள் அனைவரும் சல்ஹானா நகரில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த 30–ந்தேதி மதகுரு ஒருவரின் தலைமையில் ஒன்று திரண்டனர். அங்கு சிறப்பு தொழுகை முடிந்த பின்பு பாகிஸ்தான் ராணுவம் தங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்று பயங்கரவாதிகள் குற்றம் சாட்டினர். பின்னர், இந்தியா எப்போதும் மறக்க முடியாத அளவிற்கு பாடம் புகட்டுவோம் என்றும் அவர்கள் சபதம் எடுத்துக் கொண்டனர்.அத்முகும் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ முகாமும் உள்ளது. அதையொட்டிய கத்நார் நீரோடை பகுதிகளில் இருந்த லஷ்கர் இ–தொய்பா பயங்கரவாதிகள் முகாமையும் இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இந்த தாக்குதல்களின்போது மொத்தம் 6 முகாம்கள் தகர்க்கப்பட்டன.இவ்வாறு அவர் கூறினார்.கடுமை இல்லை
பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவம் கூறினாலும், அந்த தாக்குதல்கள் மிகவும் கடுமையானதாக அமைந்திருக்கவில்லை என்றும் நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply