ஜெயலலிதா நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என மருத்துவமனை அறிவிப்பு
உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் படிப்படியாக மேம்பட்டுவருவதாகவும், அவர் நீண்ட காலம் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும் என்றும் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.அப்போலோ மருத்துவமனை வியாழக்கிழமையன்று மாலையில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து, படிப்படியாக மேம்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுவரும் ஆண்டிபயாடிக் மருந்துகள் தொடர்ந்து வழங்கப்பட்டுவருவதாகவும், தீவிர சிகிச்சை நிபுணர்கள், இதயநோய் நிபுணர்கள், தொற்றுநோய் நிபுணர்கள், நீரிழிவு நோய் நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட மருத்துவர்கள் குழு முதல்வரின் உடல்நிலையைக் கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவர்கள்
எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தைச் சேர்ந்த நுரையீரல் மருத்துவ நிபுணர் ஜி.சி. கில்னானி, மயக்க மருந்து நிபுணரான அஞ்சன் ட்ரிகா, இதயநோய் நிபுணரான நிதீஷ் நாயக் உள்ளிட்ட மருத்துவர்கள், முதலமைச்சருக்கு சிகிச்சையளித்துவரும் மருத்துவர்களோடு புதன்கிழமையன்று ஆலோசனை நடத்தினர் என்றும் அப்பல்லோ மருத்துவமனை கூறியுள்ளது.
முதல்வருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக ஏற்றுக்கொண்ட எய்ம்ஸ் மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை வரை சென்னையில் இருப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த முப்பதாம் தேதியன்று ஜெயலலிதாவைப் பரிசோதித்த லண்டனைச் சேர்ந்த தீவிர சிகிச்சை நிபுணரான டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீல், இன்றும் முதல்வரைப் பரிசோதித்துள்ளார்.
முதல்வருக்கு ஏற்கனவே உள்ள நீரிழிவு நோய், குளிர்காலத்தில் ஏற்படும் மூச்சுக்குழல் அழற்சி ஆகியவற்றை மனதில் கொண்டும், மருத்துவ நிபுணர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும் விரிவான சிகிச்சைத் திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனை நிபுணர்கள் வகுத்திருப்பதாக அம்மருத்துவமனையின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
சுவாசக் கருவி பயன்பாடு, நுரையீரல் அடைப்பை நீக்குவதற்கான மருந்துகள், அன்டிபயாட்டிக் மருந்துகள், தேவையான சத்துகள் தொடர்ந்து முதல்வருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனையின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
தற்போது முதல்வருக்கு வழங்கப்பட்டுவரும் சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட வேண்டுமென மருத்துவ நிபுணர்கள் கருதுவதால், அவர் நீண்ட காலத்திற்கு மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டுமென மருத்துவமனை தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதா, செப்டம்பர் 22ஆம் தேதியன்று உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply