ஹைதியை சூறையாடிய மாத்யூ புயல் பலியானவர்களின் பிரேதங்கள் குவியலாக புதைப்பு
கரிபியன் கடல்பகுதியில் அமைந்துள்ள தீவுநாடான ஹைதியை கடந்த வெள்ளிக்கிழமை மணிக்கு சுமார் 230 கிலோமீட்டர் வேகத்தில் ‘மேத்யூ’ புயல் தாக்கியதில் அந்த நாட்டின் தென்பகுதி முற்றிலுமாக சின்னாபின்னமானது. இங்குள்ள பல நகரங்கள் உருக்குலைந்து போய்விட்டன. புயல் காரணமாக பெய்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தகவல் தொடர்புதுண்டிக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. தெருக்கள் எங்கும் பிணக்குவியலாக காட்சி அளிக்கின்றன. சுமார் 3½ லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.
நேற்றைய நிலவரப்படி ஹைதியில் மாத்யூ புயல்சார்ந்த விபத்துகளில் 900-க்கும் அதிகமானோர் பலியானதாக தெரியவந்துள்ளது. இன்று இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படும் நிலையில் வெள்ளநீரில் பிரேதங்கள் மிதப்பதால் உருவான காலரா நோய் தாக்குதலுக்கு 13 பேர் உயிரிழந்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளப்பெருக்கின் விளைவாக கழிவுநீர் குழாய்களில் கசிவு ஏற்பட்டு வெள்ளநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால் இங்குள்ள பல நகரங்களில் காலரா எனப்படும் வாந்தி, பேதி நோய் வேகமாக பரவி வருகிறது.
இதையடுத்து, ரன்டேல் நகரில் ஆறுபேரும், மேற்கு பகுதி கடற்கரையோர நகரமான அன்ஸே-டைனல்ட் பகுதியில் ஏழுபேரும் காலரா நோய்க்கு பலியானதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
காலரா பாதித்த பகுதிக்கு வாகனங்கள் செல்ல முடியாதவாறு வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில் படகுகள் மூலம் மருத்துவ குழுவினரை அங்கு அனுப்பி வைத்து, இந்நோய் மேலும் பரவாமல் தடுக்கும் முயற்சியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாத்யூ புயலில் பலியான சுமார் ஆயிரம் பேரின் பிரேதங்கள் குவியல், குவியலாக புதைக்கப்படும் காட்சிகளை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அழுகிய நிலையிலும், நீரில் மிதந்து வந்ததால் உடல் வீங்கிய நிலையிலும் காணப்படும் பிரேதங்களை அடையாளம் காண்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply