அரசியலுக்காக செயற்படுமானால் எதிர் தீர்மானங்கள் எடுக்க நேரிடும்

maithiriசீ. ஐ. டி., எப். சீ. ஐ. டி,இலஞ்ச ஊழல் ஆணைக்குழு போன்ற நிறுவனங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக செயற்படுமானால் அவற்றுக்கெதிராக தீர்மானங்களை எடுக்க நேரிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மனித உரிமை, அடிப்படை உரிமை, சுயாதீனம் என்பவை சகலருக்கும் சமமானதாக அமைய வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியஅவர், குற்றமிழைக்கும் இடங்களாக இத்தகைய நிறுவனங்கள் அமைந்து விடக்கூடாது என்பதையும் வலியுறுத்தினார்.

 

நீதி விசாரணைகள் ஒருவருக்கு ஒரு விதமாகவும் மற்றவருக்கு மற்றொரு விதமாகவும் செயற்பட இடமளிக்க முடியாது என குறிப்பிட்ட ஜனாதிபதி, நீதி, நியாயம், மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் முறையாக பேணப்படுவது முக்கியமாகும் என்றும் தெரிவித்தார்.

 

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அங்கவீனர்களான மற்றும் உயிர் தியாகம் செய்த படை வீரர்களின் குடும்பங்களுக்குக் காணி மற்றும் வீடுகளைக் கையளிக்கும் உத்தியோகபூர்வ  நிகழ்வு முப்படைத் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்றது. கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (12) நடைபெற்ற இந் நிகழ்வில் அமைச்சர் தயா கமகே உட்பட அமைச்சர்கள், முப்படைகளையும் சேர்ந்த உயரதிகாரிகள், யுத்தத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினர் பெருமளவில் கலந்துகொண்டனர்.

 

இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி:

 

நாம் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. சில பிரச்சினைகள் தொடர்பில் ஊடகங்கள் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்கள் தவறான விமர்சனங்களை சமூகத்துக்குக் கொண்டு செல்கின்றனர்.

 

முப்படையினரையும் திசை திருப்பும் வகையில் பல அவதூறுகள் கிளப்பிவிடப்படுகின்றன. நான் அத்தகையோருக்குக் கூறவிரும்புவது, நாட்டினது மீது உண்மையான அன்பிருந்தால் படையினரை அரசியல் கையாள்களாக உபயோகிக்க வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கின்றேன் அத்தகையதொரு தேசிய துரோகத்தை இழைப்பது நல்லதல்ல.

 

முன்னாள் ஜனாதிபதிக்கு இரண்டு வருடங்கள் கால அவகாசம் இருந்த போதும் அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பே ஜனாதிபதித் தேர்தலை நடத்தியதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு உள்ளன. அந்த இரண்டு விடயங்களுக்கும் முகங்கொடுக்க முடியாத இயலாமையே அவர் தேர்தலை நடத்த முடிவுசெய்தார்.

 

9 இலட்சம் கோடி கடன் சுமை மற்றும் அதனால் எதிர்கொள்ளவிருந்த பொருளாதார நெருக்கடி மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான நெருக்கடியாகும் இவை இரண்டுமே அவருக்குப் பெரும் அழுத்தமாக அமைந்தன. அன்றைய அரசாங்கத்தால் இலங்கை வந்த ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற முடியவில்லை.

 

இன்று பலதையும் பேசுபவர்கள் அதிகாரத்திலிருந்தபோது கூறியதை அதிகாரத்தில் இல்லாத போதும் கூறவேண்டும். முன்னாள் ஜனாதிபதி இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு வழங்கிய உறுதிமொழி என்ன என்பது அவருக்குத் தெரியும். இவற்றை மறந்து இப்போது மக்களை திசைதிருப்ப நினைப்பது நியாயமல்ல. இவையனைத்துமே உத்தியோகபூர்வ ஆவணங்களில் உள்ளன.

 

அவற்றை மறைக்க முடியாது. ஐ.நாவுக்கு முகங்கொடுக்க முடியாமல் மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை இழக்கப்பட்ட நிலையிலேயே ஜனாதிபதித் தேர்தலை நடத்த அவர் தீர்மானித்தார்.

 

நான் இப்போது சவால்விடுகிறேன் இந்த விடயம் தொடர்பில் எவரும் என்னோடு விவாதத்துக்கு வரலாம். அதற்கு நான் பதில் கொடுப்பேன். ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு அறிக்கைகளை நாம் புதிய அரசாங்கம் அமைத்த பின்பே சரிசெய்ய முடிந்தது. எம் மீதான குற்றச்சாட்டுக்களை யோசனைகளாக மாற்றுவதற்கு எம்மால் முடிந்தது. இன்று மின்சார கதிரை பற்றி எவரும் பேசுவதில்லை. சர்வதேச நீதிபதிகளை அழைப்பது தொடர்பில் எடுத்த முடிவுகள் ஆவணங்களில் உள்ளன.

 

கடந்த 18 மாதங்களில் நாட்டுக்காக எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் நாம் செய்துள்ளோம். இவற்றை மறந்து அரசியல் இலாபம் தேட முயல்வது மாபெரும் தவறாகும்.

 

யுத்தம் முடிந்த பின்னர் யுத்தவெற்றியையே தேர்தல் வெற்றிக்காக அவர்கள் உபயோகித்தனர்.

 

கடந்த வருடத்தில் எமது படைத் தளபதிகள் நீதிமன்ற விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அது விடயத்தில் எனது அதிருப்தியை நான் வெளியிட்டேன்.

 

தற்போது ஒரு வாரத்துக்கு முன்பு பாதுகாப்புச் செயலாளர் மற்றும் கடற்படைத் தளபதிகள் மூன்று பேர் நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதற்கு எனது முழுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்தேன்.

 

யுத்தம் புரிந்த கடற்படைத் தளபதிகள் மூவர் நீதிமன்ற விசாரணைக்கு அழைக்கப்பட்டதை நான் விரும்பவில்லை.

 

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு ஒரு கொள்கை இருக்க வேண்டும், அந்த ஆணைக்குழுவிலுள்ளோர் தெளிவாக விடயங்களை அறிந்து செயற்படவேண்டும். அரச நிர்வாகம், முகாமைத்துவம், படை நிர்வாகம் தொடர்பில் அவர்கள் தெரிந்திருப்பது முக்கியம்.

 

இதைப் பற்றி சிந்திக்கத் தெரியாதவர்களே தவறாக செயற்படுவதைக் காண முடிகிறது. பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஜனாதிபதி என்ற வகையில் நான் இது விடயத்தில் எனது அதிருப்தியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பில் பிரச்சினைகள் இருந்தால் அதனை கையாளுவதற்கான முறைமை உள்ளது. நாட்டின் ஜனாதிபதி என்ற வகையிலும் நிறைவேற்று அதிகார முள்ளவன் என்ற வகையிலும் எனக்கு அது தொடர்பில் அறிவிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

 

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அவ்வாறு செயற்படவேண்டிய அவசியமில்லை என சிலர் கூறலாம். எனினும் சகல ஆணைக் குழுக்களுக்கும் அரசியலமைப்புச் சபையின் மூலம் ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் இவற்றுக்கு செயலாளர்களை நியமிப்பதும் ஜனாதிபதியே.

 

நான் நீதிமன்றங்களுக்கு தொலைபேசியில் பேசுவதில்லை. சுயாதீன ஆணைக்குழுக்களில் தலையிடுபவன் நானில்லை, நான் நீதிபதிகளுக்கு அழுத்தம் விடுக்கவில்லை. பாரிய குற்றம் செய்தவர்களை நீதிபதிகள் மூலம் விடுதலையாக்க நான் ஒருபோதும் செயற்பட்டதில்லை வேறு நாடுகளில் இடம்பெறும் அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கே. மக்கள் என்னை ஜனாதிபதியாக நியமித்தனர். நாட்டில் நீதியையும் அமைதியையும் நிலைநாட்டும் பொறுப்பை வழங்கினர்.

 

இவ்வாறு செயற்படும் போது நான் எவருக்கும் அடிபணியத் தேவையில்லை. எனது பொறுப்புகளை நிறைவேற்றும் போது தேசிய பாதுகாப்பு மற்றும் படையினரைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவேன்.

 

இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சிலர் கடந்த 10 மாதங்களாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். அவர்கள் தவறிழைத்திருந்தால் வழக்குத் தொடரப்படும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் பிணை வழங்கி பின்னர் வழக்குத் தொடரலாம். மூன்று மாதங்களாகியும் இவர்களுக்கு எதுவும் இடம்பெறவில்லை.

 

இது முற்றிலும் மனித உரிமையை மீறும் செயல். இவற்றை நான் இதுவரை வெளிப்படையாக கூறியது கிடையாது.

 

எனினும் கூற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை வெளியிடவும் இவற்றுக்கெதிராக நடவடிக்கை எடுக்கவும் அவசியமுள்ளது.

 

நான் பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் பேச்சுவார்த்தையொன்றை நடத்தினேன்.

 

சி. ஐ. பீ, எப். சீ. ஐ. பீ. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காகச் செயற்படுமானால் அதற்கெதிராக தீர்மானங்களை எடுக்க நேரும். இந்த நிறுவனங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக செயற்பட முடியாது. மனித உரிமை அடிப்படை உரிமை, சட்டங்கள் சகலருக்கும் சமமானதாக அமைய வேண்டும்.

 

நியாயமில்லாமல் சிறையிலடைத்து வைத்திருப்பவர்கள் தொடர்பில் பலரும் என்மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

 

நாம் அரசாங்கம் என்ற வகையில் அரச கொள்கைக்கிணங்க செயற்பட வேண்டிய முறையொன்று உள்ளது. பாரபட்சமின்றியும் சுயாதீனமாகவும் நீதியாகவும் உரிமைகளை கவனத்திற்கொண்டு சகலரும் செயற்பட வேண்டியது முக்கியம்.

 

சட்டங்கள். நியதிகள் ஒருவருக்கு ஒருவிதமாகவும் மற்றவருக்கு வேறொரு விதமாகவும் செயற்பட இடமளிக்க முடியாது.

 

அது பாரிய குற்றமாகும். இத்தகைய குற்றமிழைக்கும் இடங்களாக இவை இருக்கக்கூடாது என நான் வெளிப்படையாக தெரிவிக்க விரும்புகின்றேன்.

 

படைத் தளபதிகளை நீதிமன்ற விசாரணைக்கு அழைத்தமை நான் அறியாத ஒன்று என்றும் பாதுகாப்பு அமைச்சரான நானே அதை செய்ததாகவும் என்மீது குற்றஞ் சுமத்தப்படுகிறது.

 

அவ்வாறு செயற்பட வேண்டிய எந்த அவசியமும் எனக்குக் கிடையாது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply