அரசியல் ஆலோசனை, கூட்டு ஆணைக்குழு, வர்த்தக சம்மேளன புரிந்துணர்வு லிபியாவில் மூன்று ஒப்பந்தம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூன்று நாள் உத்தியோகபூர்வ லிபிய விஜயத்தின் போது இலங்கைக்கும் லிபியாவுக்குமிடையில் மூன்று முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.பொருளாதார, கலாசார மற்றும் தொழில்நுட்பத்துறை சம்பந்தமான ஒத்துழைப்பு செயற்பாடுகளுக்கு கூட்டு ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கும், அரசியல் ஆலோசனைகள் தொடர்பாகவும் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைசாத்திடப்பட்டிருக்கின்றன. ஒரு நாடுகளின் வர்த்தக சம்மேளனங்களுக்கிடையிலும் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டிருக்கிறது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் லிபிய வெளிவிவகார அமைச்சரும் இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டனர்.லிபிய ஜனாதிபதி கேர்ணல் முஅம்மர் கடாபியுடன் இரண்டாவது தடவையாக நடைபெற்ற விசேட பிரத்தியேக சந்திப்புக்குப் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தூதுக்குழுவினர் விசேட விமானம் மூலம் லிபியாவின் திரிப்போலி நகரை நேற்று முன்தினமிரவு சென்றடைந்தனர்.
அங்கு லிபிய சுகாதார அமைச்சர் அலி முஹம்மத் ரிஜாஸ் ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு உட்சாக வரவேற்பு அளித்தார். திரிப்போலி நகரில் இரு நாடுகளினதும் வர்த்தக சம்மேளனங்களுக்கிடையில் சந்திப்பு நடைபெற்றது. அதன் பின்னர் இலங்கை வர்த்தக சம்மேளன குழு உறுப்பினர் ஜி. தம்மிக்க பெரேராவும், லிபிய வர்த்தக சம்மேளனம் மற்றும் கைத்தொழில் சபையின் தலைவருமான ஜி ஹுசமா அலி அலுஸ்பாவும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
இச்சமயம் வெளி விவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத், மத்திய மாகாண சபை முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா, ரியர் அட்மிரல் திஸா சமரசிங்க, வன்னி கட்டளைத் தளபதி ஜி. ஏ. சந்திரசிறி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் பிரசன்னமாகி இருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply