சிரியாவில் பள்ளிக்கூடம் மீது தாக்குதலில் 35 பேர் பலி – வேண்டுமென்றே நடத்தி இருந்தால் இது போர்க்குற்றம் என ஐ.நா. கருத்து
சிரியாவில் பள்ளிக்கூட வளாகம் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 35 பேர் பலியாகினர். இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்றால், இது போர்க்குற்றம்தான் என ஐ.நா. சபை கருத்து தெரிவித்துள்ளது.சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர் படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு, மார்ச் மாதம் 15-ந்தேதி உள்நாட்டுப்போர் தொடங்கியது. அவ்வப்போது சிறிய அளவில் சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட்டபோதும், தொடர்ந்து 6-வது ஆண்டாக இந்த உள்நாட்டுப்போர் நீடிக்கிறது.
3 லட்சத்துக்கும் அதிகமானோர் இதில் கொல்லப்பட்டு விட்டனர். பல லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.
ஆனாலும் சண்டை முடிவுக்கு வந்தபாடில்லை. தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் அங்குள்ள இத்லிப் மாகாணத்தில் ஹாஸ் என்ற கிராமத்தில் உள்ள பள்ளிக்கூட வளாகம் மற்றும், சுற்றுப்புறங்கள் மீது நேற்று முன்தினம் போர் விமானங்கள் 6 முறை வான்தாக்குதல்களை நடத்தின. இதனால் பள்ளி கட்டிடங்கள் பெருத்த சேதத்துக்குள்ளாயின.
பெரிய அளவில் கரும்புகை மண்டலம் உருவானது. குழந்தைகளும், ஆசிரியர்களும் கதறினர். துடித்தனர். தவித்தனர்.
“சிரிய அதிபர் ஆதரவு படையினர் நடத்திய இந்த தாக்குதலில் 11 குழந்தைகள் உள்பட 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர்” என லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிற சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியதாக சி.என்.என். தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களை தொடர்ந்து அங்கு சிரிய மக்கள் பாதுகாப்பு படையினரும், பொதுமக்களும் மீட்புப்பணியில் இறங்கினர். இடிபாடுகளுக்குள் கிடந்தவர்களை மீட்டனர். பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை உயரக்கூடும் என சிரிய மனித உரிமை கண்காணிப்பக இயக்குனர் ரமி அப்துல் ரகுமான் கூறினார்.
இந்த பயங்கர தாக்குதல் உலக நாடுகளையெல்லாம் உலுக்கி உள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்த ஐ.நா. சபையின் குழந்தைகள் நல அமைப்பு யுனிசெப்பின் செயல் இயக்குனர் டோனி லேக், “இது மிகப்பெரிய துயரம். இது ஒரு கொடிய குற்றம். இந்த தாக்குதலை வேண்டுமென்றே நடத்தி இருந்தால், அது போர்க்குற்றம் ஆகும்” என கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக போர் தொடங்கிய பிறகு நடந்த மிக கொடூரமான வன்செயல் இதுதான்” எனவும் குறிப்பிட்டார்.
தாக்குதல் நடந்த வளாகத்தில் 3 பள்ளிக்கூடங்கள் இயங்கி வந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த தாக்குதலை அதிபர் ஆதரவு படையினர் நடத்தியுள்ளதாக சிரிய மனித உரிமை கண்காணிப்பகம் கூறினாலும், சிரியாவின் போர் விமானங்களையும், ரஷியாவின் போர் விமானங்களையும் பிரித்துப் பார்ப்பது கடினம் என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷியாவும் வான்தாக்குதல்கள் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply