500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, தைரியமான முடிவு : சிறப்பு புலனாய்வு குழு
500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தைரியமான முடிவு என்று கருப்பு பணம் தொடர்பாக விசாரித்துவரும் சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்து உள்ளது. சிறப்பு புலனாய்வு குழு தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.பி.ஷா பேசுகையில், “இது மிகவும் சிறப்பான முடிவு. இது ஒரு தைரியமான நடவடிக்கையாகும். கருப்பு பணம் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த முடியும்,” என்றார். உள்நாட்டில் கணக்கில் காட்டாத பணத்தை வைத்திருப்பவர்கள், அந்த பணத்துக்கு கணக்கு காண்பித்து, வரி மற்றும் அபராதம் செலுத்தும் திட்டத்தையும் மத்திய அரசு அறிவித்தது. இதன்படி கணக்கை வெளிக்காட்டாதவர்களும், வரிகட்டாத சொத்துக்கள் மற்றும் வருமானம் கொண்டு உள்ளவர்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்றார்.
ஊழல் வழியாக கருப்பு பணத்தை திரட்டியவர்களின் பணம் சிலரது கையில் இருக்கும், அவர்கள் பாதிக்கப்படுவார்கள், இது ஒரு நல்ல விஷயம். இப்போதைய நிலையில் மத்திய அரசு எடுத்த மிகவும் சிறப்பான நடவடிக்கையாகும் என்று தெரிவித்து உள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்பட்டது. வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் முறைகேடாக பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த வக்கீலான ராம்ஜெத் மலானி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
இவ்விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, கருப்பு பணம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி எம்.பி. ஷாவை தலைவராகவும், மற்றொரு முன்னாள் நீதிபதி அரிஜித் பசாயத்தை துணைத்தலைவராகவும், 11 பேரை உறுப்பினர்களாகவும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை மத்திய அரசு அமைத்தது. மத்தியில் ஆட்சியில் அமர்ந்ததை தொடர்ந்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் பலனாக, ரூ.65 ஆயிரம் கோடி கருப்பு பணம் வெளியே வந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply