படைவீரர்களுக்கும் அரசுக்குமிடையில் பிளவை ஏற்படுத்த சதி
அரசியலமைப்பு உட்பட மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற செயற்படுகையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சீர்குலைக்க சில விஷமக் குழுக்கள் சதி முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அங்கவீனமான படையினரின் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற சிலர் பகீரத முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிவித்த ஜனாதிபதி, ஆட்சியமைக்க ஒத்துழைத்த அனைத்து தரப்பினரினதும் முழுமையான ஒத்துழைப்பு அரசாங்கத்துக்கு அவசியம் என்றும் தெரிவித்தார்.
அமரர் மாதுலுவாவே சோபித தேரரின் ஓராண்டு நிறைவையொட்டிய நினைவஞ்சலி நிகழ்வு நேற்றைய தினம் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
நாம் அரசாங்கம் அமைத்து 22 மாதங்களே நிறைவடைகின்றன. இக் காலத்தில் நாம் மேற்கொண்ட செயற்பாடுகளில் திருப்தியடைவோர் போன்று அதிருப்தியடைபவர்களும் உள்ளனர். தேசிய அரசாங்கத்தை உருவாக்க ஒத்துழைத்தவர்களே இப்போது அரசாங்கத்துக்கு எதிராக குற்றஞ்சாட்டுவதையும் காண முடிகிறது.
புதிய அரசாங்கம் அமைத்து 100 நாள் திட்டத்தில் பாராளுமன்றத்தில் 3 ல் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று 19 வது திருத்தத்தை நிறைவேற்றியுள்ளமை சுலபமான காரியமல்ல. அதற்காக உச்ச அளவில் உழைக்க நேர்ந்தது. எவர் என்ன கூறினாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நான் இருந்திராவிட்டால் இதனைச் செய்திருக்க முடியாது. கட்சிக்குள் நல்லுறவை ஏற்படுத்தி இணக்கப்பாட்டுடன் அதனை முடிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம்.
அதேபோன்று தமது சட்டத்தரணியை நீதிமன்றத்துக்கு அனுப்பி தமது அதிகாரங்களை இல்லாதொழிக்க தாமே நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி உலகில் எந்த நாடுகளிலும் இருந்திருக்க முடியாது.
19 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அடுத்த நடவடிக்கையாக புதிய அரசியலமைப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அரசியல் தீர்வு அதிகாரப் பகிர்வு, நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழித்தல் உட்பட பல்வேறு விடயங்கள் அதனூடாக நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன.
இதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமாகும். அதற்கெதிரான தடைகளை வெற்றி கொள்ள வேண்டியது அவசியமாகும். இத்தகைய செயற்பாடுகளுக்கு மத்தியில் சிலர் தவறான கருத்துக்களைப் பரப்பும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளனர். எதிர்பாராத பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. சில குழுக்கள் அரசாங்கத்திற்கு எதிரான சதி முயற்சிகளில் இறங்கியுள்ளதை அங்கவீனர் படையினரின் ஆர்ப்பாட்டத்தில் காண முடிகிறது.
அங்கவீனரான படையினருக்கே தெரியாமல் அவர்களின் பின்னணியில் குறுகிய அரசியல் நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டன. படையினரின் கோரிக்கை 6 வருடம் பழமையானது எனினும் 4 மாதத்துக்கு முன்னரே எனது கைகளில் கிடைத்தது. அதில் சில விடயங்கள் அரசியலமைப்புக்கு முரணாக இருந்த போதும் நாட்டுக்காக தியாகம் செய்தவர்கள் என்ற வகையில் அவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நான் நாட்டில் இருந்திருந்தால் கண்ணீர்ப் புகை பிரயோகிக்காமல் அவர்களை ஜனாதிபதி செயலகத்துக்குள் பிரவேசிக்க விட்டிருப்பேன் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகம் அறிக்கை
யுத்தத்தினால் அங்கவீனமுற்று ஓய்வுபெற்ற படைவீரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்கி, படையினருக்கும், அரசாங்கத்திற்குமிடையே பிளவை ஏற்படுத்த திட்டமிட்ட சதி மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அலுவலக வளாகத்திற்கு முன்னால் திரண்ட அங்கவீன படையினர்களை பின்னால் இருந்து இயக்குபவர்கள் யார் என்பதை அப்பாவிகளான இவர்கள் அறிந்திருக்கவில்லை . பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அனைத்து தேவைப்பாடுகளும் முழுமை பெற்றிருந்த நிலையில் இவ்வாறு குழப்ப நிலையை ஏற்படுத்துவதே அரசுக்கு எதிரான சக்திகளின் நோக்கமாகும். இது தொடர்பில் அறிக்ைகயொன்றை வெளியிட்டுள்ள
ஜனாதிபதி செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: அங்கவீனமுற்ற படைவீரர்களின் கோரிக்கையைப் பெற்றுக்கொடுப்பதற்கு பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு மாதங்களுக்கு முன்னர் அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்திருந்தார்.
குறித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு திறைசேரியின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு அது குறித்து பாதுகாப்பு அமைச்சுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி இந்த விடயத்தில் நேரடியாகத் தலையிட்டிருந்தபோதும் நீண்டகாலமாக அரசாங்கத்தை எதிர்த்துவரும் அரசியல் அமைப்புகளில் செயற்படும் சில பிக்குகள், சில வெளியாட்களின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்ட நேற்றைய நிகழ்வுகள் அரசியல் நோக்கமுடையவை என்பது தெளிவானது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதி அலுவலக பிரதிநிதிகளுக்கும் படைவீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையே பாதுகாப்பு அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply