போர்க்குற்ற விசாரணையை ஏற்க முடியாது : ஜனாதிபதி
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தமது கடமை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் த இந்து வுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலின் போது தமக்கு வாக்களித்த 90 வீதமான தமிழ் மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.அவர்களின் பிரச்சினையை தீர்ப்பது தமது பொறுப்பு மாத்திரமல்ல. தமது கடமையும் கூட என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்தபேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நல்லிணக்கம் என்பது சில நாட்களில் செய்யக்கூடிய ஒன்றல்ல. அரசாங்கத்தை பொறுத்தவரையில் சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தீர்வுக்கு பெருமுயற்சியை மேற்கொள்கிறது.
சர்வதேச போர்க்குற்ற விசாரணையை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றுக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, வெளிநாடுகளின் நீதித்துறை நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்..
ஐக்கிய தேசியக் கட்சியுடன் புரிந்துணர்வுடன் நடந்துக்கொள்வது தொடர்பில் தமக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் அழுத்தங்கள் இல்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தாம் பதவியேற்ற பின்னர் இதுவரை மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்து திருப்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி, இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனைகள் மற்றும் நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள 9000 பில்லியன் கடன் பளு என்பனவற்றை தீர்க்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனினும் பதவியை இழந்தவர்கள் தமது நடவடிக்கைகளை, குழப்ப முனைவதாக குற்றம் சுமத்தியுள்ள ஜனாதிபதி, 50 வருட அரசியல் அனுபவத்தை கொண்டுள்ளதன் அடிப்படையில் தாம் எந்தவொரு சவாலையும் சமாளித்து வெற்றிப்பெற முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியான பின்னர் 11 தடவைகள் யாழ்ப்பாணத்துக்கு தாம் விஜயம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், முன்னர் இருந்த ஜனாதிபதிகள் எவரும் அவ்வாறு செல்லவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கை பொறுத்த வரையில் 90 வீதமான தமிழ் மக்கள் தமக்கு வாக்களித்துள்ளார்கள். எனவே அவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டியது தமது கடமையாகும்.
தாம் பதவிக்கு வந்தபோது நாட்டின் சட்டம் பலவீனமாக இருந்தது. எனவேதான் பிரதம நீதியரசராக சிறுபான்மையினத்தை சேர்ந்த ஒருவரை நியமித்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, சிறுபான்மையினர் மத்தியில் இலங்கையின் நீதிமுறை தொடர்பாக நம்பிக்கையை கட்டியெழுப்புவது இதன் நோக்காகும்.
சமஷ்டி என்ற சொல் தென்னிலங்கை மக்கள் மத்தியில் பாதகமானதாக பார்க்கப்படுகிறது. வடக்கு மக்களை பொறுத்தவரை ஒற்றையாட்சி என்ற சொல் அபாயமானதாக கருதப்படுகிறது.
எனவே அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொது உடன்பாடு ஒன்றுக்கு வரவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் தேவையற்ற வாதங்களை விடுத்து விரைவில் தீர்வு ஒன்றை ஏற்படுத்த முயல்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் புதிய கட்சி தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், புதிய ஒரு அரசியல் சக்தி உருவாவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று மைத்திரிபால கூறியுள்ளார்.
இந்திய, – இலங்கை எட்கா உடன்படிக்கை தொடர்பில் கருத்துரைத்துள்ள அவர், எந்த நாட்டுக்கும் பாதகம் ஏற்படாத வகையில் அது செயற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவும் சீனாவும் இலங்கையின் நெருங்கிய நண்பர்கள் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply