புலிப் பாசிசத்தை பாதுகாப்பதற்காக துணை நிற்பவர்களை புலம் பெயர் தளத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டோர் அம்பலப்படுத்தியாக வேண்டும் : தி. சிறீதரன்

வன்னியில் புலிகளால் பணயம் வைக்கப்பட்டிருக்கும் மக்களை விடுவிக்குமாறு இந்த உலகமே கோரிக்கை விடுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அன்றி புலம் பெயர்ந்த நாடுகளில் ஆர்ப்பாட்டம் நடத்தும் புலி ஆதரவாளர்கள் இந்தக் கோரிக்கையை அவதந்திரமாக தவிர்த்து வருகிறார்கள்.

அவர்களை பொறுத்தவரை புலிகளின் அதிகாரம், இருப்பு என்பன மக்களின் உயிர் வாழ்க்கையை விட முக்கியமானது. மக்கள் இருக்கிறார்களோ இல்லையோ புலிகளும் அவர்களுடைய ஆயுதங்களும், அவர்களுடைய பயங்கரவாதமும் கட்டிக்காக்கப்பட வேண்டுமென்று இவர்கள் விரும்புகிறார்கள்.

புலம் பெயர்ந்த நாடுகளில் வெகு சௌகரியமாக அந்த நாடுகளில் காணப்படும் ஜனநாயக சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் இவர்கள் நல்ல கல்வியையும், பொருளாதார வாய்ப்பு வசதிகளையும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் வன்னியில் நாளும் பொழுதும் செத்துக் கொண்டிருக்கும், ஊனமுற்றுக் கொண்டிருக்கும் மக்களை பற்றிய எந்த கரிசனையும் இல்லாமல் அவர்களை விடுவிக்குமாறு புலிகளை கோராமல் புலிகள் பாணியில் உடையணிந்து (யுத்தம் என்பது கொடுமையானது, அதில் சம்பந்தப்படுபவர்கள் மிகுந்த நரக வேதனையை அனுபவிப்பர். ஆனால் ஏதோ நாடகத்திற்கு வேஷம் அணிந்து செல்வது போல் உல்லாசமாக ஐரோப்பாவினதும், வட அமெரிக்காவினதும் சுதந்திரமான, ஆரோக்கியமாக தெருக்களில் உலா வருகிறார்கள்) புலி பாசிசத்தை தக்க வைப்பதற்கான விநோத உடை ஊர்வலங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

துன்புறும் மக்களுக்காக இரத்தக் கண்ணீர் வடிப்பவர்களை அவர்களுக்காக வீதியில் இறங்கியிருப்பவர்களை இங்கு நாம் சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்த வேண்டும். ஆனால் புலி பாசிசத்தை பாதுகாப்பதற்காக வடக்கில் முழு தமிழ்ச் சமூகமுமே ஊனமுறுவதற்கும், அழிந்து போவதற்கும் துணை நிற்பவர்களை புலம் பெயர் தளத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டோர் அம்பலப்படுத்தியாக வேண்டும்.

அதிகூடிய பொருளாதார வளங்களுடன் புலி பாசிசத்தை தக்கவைப்பதற்கான இயக்கத்தை உலகளாவியளவில் நடாத்துபவர்கள் இங்குள்ள மக்கள் அழிந்து போவதற்கு துணை நிற்பவர்களாகவே கருத முடியும். ஒரு விதத்தில் இது இரண்டு வர்க்கங்களுக்கு இடையிலான நிலைமை மாதிரியும்கூட.

வன்னியில் உள்ள மக்கள் சாவதற்கு விதிக்கப்பட்டவர்கள். புலி பாசிசம் பாதுகாக்கப்பட வேண்டும். அதனூடாக தமது சௌகரியமான இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அகங்காரத்துடனேயே இவர்கள் வீதியில் இறங்கியிருக்கிறார்கள்.

மக்கள் பற்றி இவர்களுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் ஐ.நாவின் மனித ஆணையகத்தின் பணிப்பாளர் ஹோம்ஸ் கேட்டுக் கொண்டதுபோல் புலிகள் மனித கேடயங்களாக வைத்திருக்கும் மக்களை விடுவிக்குமாறு கேட்கட்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply