வேலை நிறுத்த போராட்டம் நேற்று திடீர் இடை நிறுத்தம்

raviவீதி ஒழுங்கு விதிகளை மீறுவோருக்கு ஆகக் குறைந்தது 2500 ரூபா அபராதம் விதிப்பதற்கு எதிராக நேற்று நள்ளிரவு முதல் பஸ் உரிமையாளர் சங்கங்கள் இணைந்து மேற்கொள்ளவிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.நேற்றைய தினம் மாலை தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களுக்கும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தினூடாக வீதி ஒழுங்குகளை மீறுவோரிடம் அறவிடும் அபராதம் 2500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. இதற்கு தனியார் பஸ் சங்கங்கள், பாடசாலை வேன் சங்கங்கள் என்பன எதிர்ப்பு வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் தனியார் பஸ் வேலை நிறுத்தம் நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் மூன்று பிரதான பஸ் சங்கங்களுக்குமிடையில் நேற்று மாலை நிதி அமைச்சில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

2500 ரூபா அபராதம் தொடர்பில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக இதன்போது அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 2500 ரூபா அபராதம் அறவிடும் யோசனை உள்ளடக்கப்படவில்லை என அமைச்சர் பேச்சுவார்த்தையின் போது கூறியதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன கூறினார். இன்றும் (15) பஸ் சங்கங்களுடன் பேச அமைச்சர் இணங்கியுள்ளார். இன்று ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த விவகாரம் ஆராயப்பட உள்ளது.

வேலை நிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதோடு இன்று அமைச்சருடன் நடைபெறும் பேச்சுவார்த்தையின் பின்னரே இறுதி முடிவு எட்டப்பட உள்ளது.

பேச்சுவார்த்தையின் போது அதே இடத்தில் அபராதம் விதிக்கப்பட்ட ஆவணங்கள் அமைச்சருக்கு காண்பிக்கப்பட்டது. நேற்று ஒரு மணி நேரத்திற்கு குறைவாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதேவேளை மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவை சங்கம் வேலை நிறுத்தத்தில் குதிப்பதில்லை என ஏற்கனவே அறிவித்திருந்தது. ஒவ்வொரு தடவையும் கெமுனு விஜேரத்ன இவ்வாறு வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்து பேச்சுவார்த்தையின் பின் கைவிடுவது வழமை என அந்த சங்கம் குறிப்பிட்டது.

முன்னதாக நேற்று பிற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன கருத்துத் தெரிவித்தார். நாட் கூலிக்கு வேலை செய்யும் தனியார் பஸ் ஓட்டுனர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு 2500 ரூபா தண்டப் பணம் எல்லை மீறிய சுமை என்பதனாலேயே இதனை எதிர்த்து அடையாள பணி பகிஷ்கரிப்பில் களமிறங்க முடிவுசெய்ததாக அவர் தெரிவித்தார்.

வரவு – செலவுத் திட்டத்தில் பொதுமக்கள் போக்குவரத்து சேவைக்கு சிறிய தாயின் கவனிப்பே வழங்கப்பட்டுள்ளதென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மைக்கால கணக்கெடுப்புகளின் படி தனியார் விபத்துக்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைவடைந்துள்ள நிலையில் வீதி ஒழுக்க விதிமுறைகளை காரணம்காட்டி தண்டப் பணத்தை அதிகரிப்பது சாதாரணமானது என்றும் அவர் கூறினார்.

“2500 ரூபா தண்டப் பணம் அறவிடுவது தொடருமாயின் தனியார் பஸ் சேவை நடத்துவதனை நாம் கைவிட்டு விடுவோம். தனியார் துறைக்கு சொந்தமான அனைத்து பஸ்களையும் அரசாங்கத்துக்கு எடுத்துக்கொண்டு அதற்கான நட்டஈட்டை நிதி அமைச்சர் எமக்கு பெற்றுத்தர வேண்டும் “ என்றும் சங்கத்தின் தலவர் கெமுனு தெரிவித்தார்.

“அரச மற்றும் தனியார் பஸ் சேவைகளுக்கான ஒன்றிணைந்த நேர அட்டவணை தயாரித்தல், வேக எல்லையை வர்த்தகமானியில் பிரசுரித்தல் உள்ளிட்ட எமது கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றுமாயின் 2,500 ரூபா அல்லது 25 ஆயிரம் ரூபா தண்டப் பணத்தை வழங்க நாம் தயார்” என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று நண்பகல் நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துகளை முன்வைத்தார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் வரையறுக்கப்பட்ட பொதுமக்கள் போக்குவரத்துச் சங்க சம்மேளனத்தின் தலைவர் சம்பத் ரணதுங்க, அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சம்மேளனத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் சங்கத் தலைவர் கதிர் ஜயரூக், அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் கே. லலித் சந்திரசிறி பிரணாந்து ஆகியோரும் கலந்து கொண்டு 2500 ரூபா தண்டப் பணத்துக்கான தமது எதிர்ப்பினை வெளிக்காட்டினர்.

சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன மேலும் கூறியதாவது ; 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மூலம் தனியார் பஸ் துறை வீழ்ச்சியடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தண்டப் பணத்தின் தொகையை அறிந்த பின்னர் சாரதிகள் பஸ் ஓட்டுவதற்கு முன்வருகிறார்கள் இல்லை.

கல்வி, சுகாதாரத்துக்கு வழங்கிய முக்கியத்துவம் பொதுமக்கள் போக்குவரத்துக்கு வழங்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும். நாம் நேரடியாக 10 மில்லியன் மக்களுக்கு போக்குவரத்து சேவை வழங்குகிறோம்.

இதன்மூலம் மொத்த தேசிய உற்பத்தியில் தனியார் போக்குவரத்துக்கு 12 சதவீதம் பொது பங்களிப்பு உண்டு. கடந்த 03 வருடங்களுக்குள் தனியார் பஸ் விபத்துக்கள் பெருமளவில் குறைவடைந்துள்ளன. இந்நிலையில் தண்டப் பணம் அதிகரிக்கப்படுமாயின் அனைத்து சாரதிகளும் தண்டப் பணம் செலுத்த இயலாமல் சிறையில் இருக்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply