தடை நீக்கப்பட்ட பின்னர் 36,000 மெ.தொன் மீன்கள் ஐரோ.வுக்கு ஏற்றுமதி
இலங்கை மீன் ஏற்றுமதிக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கப்பட்டுள்ளதையடுத்து இதுவரை 36 ஆயிரம் மெற்றிக்தொன் மீன்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்றுத் தெரிவித்தார். இதன்மூலம் அரசாங்கத்துக்கு 9 ஆயிரம் மில்லியன் ரூபா வருமானம் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார். இலங்கை மீன் ஏற்றுமதிக்கான தடை ஐரோப்பிய ஒன்றியத்தினால் கடந்த ஜூன் 22ஆம் திகதி நீக்கப்பட்டது.
அப்போது முதல் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களிலேயே 36 ஆயிரம் மெட்ரிக்தொன் மீன்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
மீன்பிடி தடை விதிக்கப்பட்டிருந்த 2015 ஜனவரி முதல் 2016 ஜூன் வரையான 18 மாதங்களிலும் ஆகக் கூடியது 4,200 மெட்ரிக் தொன் மீன்களே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன.
இதன்படி தற்போது மாதாந்தம் 11 ஆயிரம் மெட்ரிக்தொன் மீன்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன் இதன்மூலம் 3 ஆயிரம் மில்லியன் ரூபா வருமானமாகவும் ஈட்டப்பட்டுள்ளது.
அத்துடன் ஏற்றுமதிக்காக இறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கு விதிக்கப்படவிருந்த செஸ் வரி, மீன் இறக்குமதியாளர்களின் வேண்டுகோளுக்கமைய நீக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை உள்ளூர் மீனவர்களிடமிருந்தும் கூடுதலான மீன்களை பெற்று ஏற்றுமதி செய்யுமாறும் அமைச்சர் மீன் ஏற்றுமதியாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் மீன் ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டமையையடுத்து இலங்கையில் மீன் ஏற்றுமதி மூலமான வருமானம் அதிகரித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply