பனாமா ஊழல்: சுப்ரீம் கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் சொத்து பட்டியல் தாக்கல்

SARIF‘பனாமா’ ஊழல் வழக்கில், பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் சொத்து பட்டியல் தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் விசாரணை கமிஷன் அமைப்பது பற்றி நாளை முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள பிரபலங்கள் மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் ரகசியமாக முதலீடு செய்திருப்பதாகவும், வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா லீக்ஸ்’ என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன் வெளியிட்டுள்ள தகவல்கள், உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அந்த வகையில் பனாமாவின் மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் சுமார் 1 கோடியே 15 லட்சம் ரகசிய ஆவணங்கள், உலக நாடுகளை சேர்ந்த தனி நபர்கள், நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதற்காக போலி கம்பெனிகள் துவங்கவும், ரகசிய வங்கி கணக்குகள் தொடங்கவும் உதவி இருப்பதை அம்பலப்படுத்தி உள்ளன.

இந்த ஊழலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் பலன் அடைந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதில் அவரது பதவியைப் பறிக்க வேண்டும் என்று அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான், வக்கீல் தாரிக் ஆசாத், ஜமாத் இ இஸ்லாமி (ஜி) தலைவர் சிராஜூல் ஹக், அவாமி முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் ரஷீத் அகமது ஆகியோர் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கை தலைமை நீதிபதி அன்வர் ஜாகீர் ஜமாலி தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு ஏற்றது.

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி அன்வர் ஜாகீர் ஜமாலி தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நவாஸ் ஷெரீப், அவரது மகள் மர்யம் ஆகியோரின் சொத்து பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்டியல் 400 பக்கங்களைக் கொண்டதாகும். 2011-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள பண பரிமாற்றங்கள் பற்றிய தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

அதே நேரத்தில் வெளிநாட்டில் வாழும் நவாஸ் ஷெரீப்பின் மகன்கள் ஹசன், உசேன் நவாஸ் ஆகியோர் சொத்து பட்டியலை தாக்கல் செய்யவில்லை.

சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டபடி அவர்கள் சொத்து பட்டியலை தாக்கல் செய்யாததால் தலைமை நீதிபதி அதிருப்தி அடைந்தார். இது தொடர்பாக அவர் நவாஸ் ஷெரீப்பின் வக்கீல் அக்ரம் ஷேக்கிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், “அவர்களது சொத்து பட்டியலை தாக்கல் செய்வதற்கு கொஞ்சம் அவகாசம் தர வேண்டும்” என கேட்டார்.

அதே நேரத்தில் நவாஸ் ஷெரீப் மற்றும் குடும்பத்தினர் மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் ஆவண நகல்களை வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள் அடுத்தகட்ட விசாரணையை 17-ந் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்தனர்.

அப்போது நவாஸ் ஷெரீப் மற்றும் குடும்பத்தினர் மீதான ஊழல் புகார் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்தப்படுமா என்பது தெரிய வரும் என தகவல்கள் கூறுகின்றன.

வழக்கு விசாரணை முடிந்தபோது, நவாஸ் ஷெரீப் மகன்களின் சொத்து பட்டியலை அவர்களது வக்கீல் தாக்கல் செய்து விட்டதாக கடைசியாக வந்த தகவல்கள் தெரிவித்தன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply