அறிவு அதிகரிக்கும் அளவுக்கு, சம்பளமும் அதிகரிக்கப்படல் வேண்டும் : பிரதமர்
குறைந்த சம்பளம் வழங்கும் பொருளாதாரத்திலிருந்து நாம் விலகிச் செல்ல வேண்டும். ஆகக் குறைந்த சம்பளம் 40 ஆயிரமாகக் காணப்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அறிவு அதிகரிக்கும் அளவுக்கு, சம்பளமும் அதிகரிக்கப்படல் வேண்டும். கல்வித் துறையின் மாற்றம், அதனை இலக்காகக் கொண்டதாகவே அமைந்துள்ளது” – இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பு 12, அல் ஹுஸைன் கல்லூரியில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“நல்ல நாடொன்றை உருவாக்க வேண்டுமாயின், பொருளாதாரமும் அரசியலமைப்பும் மாத்திரம் போதுமானதன்று. எதிர்கால சந்ததியினருக்கான நல்ல கல்வித் திட்டமொன்று, அந்த நாட்டில் காணப்பட வேண்டும். நம் நாட்டுக் கல்வித் திட்ட அபிவிருத்திக்காக, பாரிய நிதியை ஒதுக்கீடு செய்வோம்”
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசாங்கம், இலங்கையின் கல்வித் துறையை அபிவிருத்தி செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. எமது புதிய கல்வி அபிவிருத்தித் திட்டங்களுக்கமைய, தற்போது நிலவும் கல்வித் திட்டத்திலும் பார்க்க உயர் நவீனத்துவம் கொண்ட கல்வித் திட்டமொன்று, எமது மாணவர் சமுதாயத்துக்குப் பெற்றுக்கொடுக்கப்படும்” என்றார்.
“எமக்கு கிடைத்ததை விட சிறந்த எதிர்காலத்தை, எமது இளைஞர் சமுதாயத்துக்குப் பெற்றுக்கொடுப்பதே, எமது பிரதான இலக்காகும். தற்காலத்தில், அலைபேசிகள், ஐபாட் போன்ற தொழில்நுட்பக் கருவிகள், பயன்பாட்டில் உள்ள நிலையில், தொழில்நுட்பத்துடன் சேர்த்து, எமது பொருளாதாரத்தையும் நாம் மேம்படுத்த வேண்டும். அதற்காக நாம், புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம்” எனவும் பிரதமர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply