மட்டு. கிராம சேவகருக்கு பாதுகாப்பு வழங்க அமைச்சர் மனோ கோரிக்கை

manoமட்டக்களப்பு மங்களாராமைய விஹாராதிபதியினால், கெவலியாமடு பகுதியில், கடுமையாக அச்சுறுத்தலுக்கும், இனவாத நிந்தனைக்கும் உள்ளாகிய கச்சைக்கொடி கிராம சேவகர் சிதம்பரநாதன் ஜீவிதன், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனை நேரில் சந்தித்து முறையீடு செய்துள்ளார்.

 

இந்த சந்திப்பின் போது, அப்பிராந்திய குடியேற்ற அதிகாரி அரியரத்தினம் சிவகுமார், அயல் வலய கிராமசேவகர் ஜதீஸ்குமார் சயந்தன், ஜ.ம.மு தேசிய அமைப்பாளர் எஸ். ராஜேந்திரன், அமைச்சு அதிகாரியும் ஜ.ம.மு நிர்வாக செயலாளருமான பிரியாணி குணரத்ன, மனித உரிமை மற்றும் அபிவிருத்தி நிலைய சட்ட உதவியாளர் டொமினிக் பிரேமநாத் ஆகியோர் உடனிருந்தனர்.

 

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கூறியதாவது, கிராம சேவகர் சிதம்பரநாதன் ஜீவிதனுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும்படி சட்ட ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் சாகல ரத்னாயக்கவுக்கு நான் அறிவித்துள்ளேன். அதேபோல் கிராம சேவகர்களின் கடமைக்கு பொறுப்பான உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கும், இது தொடர்பில் அறிவித்துள்ளேன்.

 

இந்நிலையில் பிரபல சட்டத்தரணியும், மனித உரிமையாளருமான இரத்தினவேலின் வழிகாட்டலில் கிராம சேவகர் சிதம்பரநாதன் ஜீவிதன், மனித உரிமை ஆணைக்குழுவிலும் இன்று முறைப்பாடு செய்துள்ளார். இவருக்கு துணையாக மனித உரிமை மற்றும் அபிவிருத்தி நிலைய சட்ட உதவியாளர் டொமினிக் பிரேமநாத் செயற்பட்டுள்ளார்.

 

இந்த பிரச்சினை தொடர்பிலும், நாட்டில் இன்று தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக எழுந்துள்ள பொதுவான பேரினவாத கருத்தோட்டம் தொடர்பிலும் இன்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் சந்திக்க உள்ளேன்.

 

அதேபோல் நேற்று மாலை சோபித தேரரின் பெயரில் இயங்கி வரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தை சார்ந்த சிங்கள முற்போக்கு சிவில் சமூக பிரதிநிதிகளுடனான முதல்கட்ட சந்திப்பு நடந்தது. இவ்வார இறுதியில் இந்த பெருகி வரும் இனவாதம் தொடர்பில் காத்திரமான நிலைபாட்டைவெளிப்படுத்த உள்ளதாக சமூக நீதிக்கான தேசிய இயக்க தலைவர் சரத் விஜெசூரிய என்னிடம் உறுதியளித்துள்ளார்.

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply