வங்கிகளில் ரூ.2 ஆயிரமாக குறைத்தது ஏன்? அருண்ஜெட்லி விளக்கம்
ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று 10 நாட்களுக்கு முன்பு அறிவித்த மத்திய அரசு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வழங்கி வருகிறது.பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளும் நடவடிக்கைகளில் நாடெங்கும் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.முதலில் பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து ரூ.4000 பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு அந்த தொகை ரூ.4500ஆக உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மத்திய அரசு ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக 7 புதிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்கான உச்ச வரம்பை ரூ.4500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக குறைத்து வெளியிடப்பட்ட மத்திய அரசின் அறிவிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் நிறைய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
இந்திய பொருளாதாரத்தை வேகப்படுத்தவே ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே அந்த அறிவிப்பை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை.
தற்போது ஏற்பட்டுள்ள இடையூறுகள், சிக்கல்கள் விரைவில் தீர்ந்து விடும். அதன்பிறகு ரூபாய் நோட்டுகள் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கிக் கொள்ளப்படும்.
நாட்டு நலனுக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை காங்கிரஸ் ஏன் எதிர்க்கிறது என்று புரியவில்லை. இந்த விஷயத்தில் அரசியல் செய்யாமல் அந்த கட்சி பொருளாதார மேம்பாட்டு செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து விட்டு பணத்தை மாற்றி கொள்வதற்கான உச்சவரம்பு ரூ.4500ஆக நிர்ணயித்து இருந்தோம். அது தவறாக பயன்படுத்தப்பட்டது. சட்ட விரோதமாக பணம் பதுக்கி வைத்து இருப்பவர்கள் அதிக அளவில் அதை மாற்றுவது தெரியவந்தது.
அரசு ஒரு போதும் இந்த முறைகேட்டுக்கு அனுமதிக்காது. அதனால்தான் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கொடுத்து பணத்தை மாற்றுவதற்கான உச்சவரம்பை ரூ.4500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக குறைத்து நடவடிக்கை எடுத்து இருக்கிறோம்.
தற்போது பணத்தை டெபாசிட் செய்வதும், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதும் சிறப்பான முறையில் நடக்கத் தொடங்கி உள்ளது. வங்கிகளில் கூட்டம் குறையத் தொடங்கியுள்ளது.
இந்திய அரசியலையும் பொருளாதாரத்தையும் சுத்தப்படுத்தியே தீர வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திரமோடி தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளார். பெரும்பாலான முதல்-மந்திரிகள் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆனால் மம்தாபானர்ஜி, கெஜ்ரிவால் போன்று சிலர் இதை வைத்து அரசியல் செய்கிறார்கள்.
புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறை ரூபாய் நோட்டுகள் தேவையான அளவுக்கு உள்ளன. எனவே பண நோட்டுகள் விஷயத்தில் யாரும் பீதி அடையவோ, குழப்பம் அடையவோ தேவை இல்லை.
6 மாதத்துக்கு முன்பே நாங்கள் நடவடிக்கையை தொடங்கி விட்டோம். எனவே தினமும் நாடெங்கும் புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தபடி இருக்கும். இது விரைவில் மக்களிடம் பண புழக்கத்தை சகஜமாக்கும்.
ஏ.டி.எம்.களில் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் முழுமையாக வரத்தொடங்கியதும் தற்போதைய இடையூறுகள் விலகி விடும்.
இவ்வாறு மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply