சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் ஜெயலலிதா
சென்னை அப்போலோ மருத்துவமனயில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இன்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருப்பதாக அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.இன்று சனிக்கிழமை மாலையில் ஜெயலலிதா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருப்பதாக அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான சி.ஆர். சரஸ்வதியும் செய்தியாளர்களிடம் இதை உறுதிசெய்தார்.
அப்போலோ மருத்துவமனையின் வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய சி.ஆர். சரஸ்வதி, “இன்று மாலையில் முதலமைச்சர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். விரைவில் அவர் பூரண குணம் பெற்று வீடு திரும்புவார்” என்று கூறினார்.
இந்தத் தகவல் வெளியானதும் அப்போலோ மருத்துவமனையின் வாசலில் அ.தி.மு.கவினர் இனிப்புகளை பரிமாறி, கோஷங்களை எழுப்பினர்.
முதலமைச்சர் ஜெயலலிதா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து மாற்றப்பட்டது குறித்து அப்போலோ மருத்துவமனை அதிகாரபூர்வமாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, முதலமைச்சர் முழுமையாக குணமடைந்து விட்டதாகவும் நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்காகவே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவின் காரணமாக ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு பிறகு நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், தில்லி அனைத்திந்திய விஞ்ஞானக் கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், லண்டனைச் சேர்ந்த அதிதீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணரான ரிச்சர்ட் பேல் ஆகியோர் ஜெயலலிதாவுக்குச் சிகிச்சையளித்தனர்.
இதற்குப் பிறகு அவருக்கு உடல் இயக்கத்தைச் சீராக்குவதற்கான இயன்முறை சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 58 நாட்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply