அமெரிக்காவில் டிரம்ப் பல்கலைக்கழக மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.167 கோடி இழப்பீடு டிரம்ப் தர ஒப்புக்கொண்டதால், வழக்கு முடிவுக்கு வருகிறது
டிரம்ப் பல்கலைக்கழக மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.167 கோடி இழப்பீடு தருவதற்கு டிரம்ப் தர ஒப்புக்கொண்டார். இதனால் அந்த வழக்கு முடிவுக்கு வருகிறது.குற்றச்சாட்டு அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெரும் கோடீசுவர தொழில் அதிபரான டொனால்டு டிரம்ப், நியூயார்க் நகரில் டிரம்ப் பல்கலைக்கழகம் நடத்தி வந்தார். இந்தப் பல்கலைக்கழகம் கடந்த 2010–ம் ஆண்டு மூடப்பட்டு விட்டது.இதில் தேர்ந்த ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தப்படும், அதன் மூலம் அவர் கொடி கட்டிப்பறந்து வந்த ரியல் எஸ்டேட் தொழிலின் ரகசியங்கள் கற்றுத்தரப்படும் என கவர்ச்சியான வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக 35 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.23½ லட்சம்) கட்டணம் செலுத்தி மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு சேர்ந்தனர்.ஆனால் அதன்படி செயல்படாமல் ஏமாற்றி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஏறத்தாழ 6 ஆயிரம் மாணவர்கள் ஏமாற்றத்தை சந்தித்தனர்.கோர்ட்டில் வழக்கு
இது தொடர்பாக அவர்கள் நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.இந்த வழக்கு, அமெரிக்க தேர்தல் பிரசாரத்தில் டிரம்புக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. இருப்பினும் அவர், ‘‘இந்த வழக்கில் நான் வெற்றி பெறுவேன். என்னைப் பொறுத்தமட்டில் நான் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டேன். என்னால் இந்த வழக்கில் தீர்வு காண முடியும். நான் இந்த வழக்கில் தீர்வு கண்டிருக்கவும் முடியும். ஆனால் அப்படி செய்யக்கூடாது என நான் முடிவு செய்தேன்’’ என கூறினார்.ரூ.167 கோடி
ஆனால் இப்போது அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து டிரம்ப் பல்கலைக்கழக மோசடி வழக்கில் பல்டி அடித்து விட்டார்.அவர் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 25 மில்லியன் டாலர் (சுமார் ரூ.167 கோடி) தீர்வுத்தொகையை இழப்பீடாக தந்து வழக்கை முடிவுக்கு கொண்டு வர ஒப்புக்கொண்டு விட்டார்.அட்டார்னி ஜெனரல் கருத்து
இதுபற்றி நியூயார்க் அட்டார்னி ஜெனரல் எரிக் ஸ்னீடர்மேன் கருத்து தெரிவிக்கையில், ‘‘இது டிரம்பின் அதிர்ச்சி தரும் பின்வாங்கல் ஆகும். 25 மில்லியன் டாலர் தீர்வுத்தொகை தருகிறேன் என்று அவர் ஒப்புக்கொண்டிருப்பது, மாணவர்களுக்கு மிகப்பெரிய வெற்றி ஆகும். டிரம்ப் பல்கலைக்கழக மாணவர்கள் பல்லாண்டு காலம் பொறுமையுடனும், விடாப்பிடியுடனும் காத்திருந்தனர். அதற்கு இது பரிசாக அமையும்’’ என குறிப்பிட்டார்.இந்த வழக்கை விசாரித்து வந்த அமெரிக்க மாவட்ட நீதிபதி கோன்ஸாலா குரியல், இரு தரப்பினரும் கோர்ட்டுக்கு வெளியே பிரச்சினைக்கு தீர்வு காண அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.ஆனால் 25 மில்லியன் டாலர் தீர்வுத்தொகை என்பது அதிகமான தொகை என்ற போதும், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய தர்ம சங்கடத்தில் இருந்து டிரம்ப் தப்பித்தார் என கூறப்படுகிறது.அதே நேரத்தில் டிரம்ப் மீது இன்னும் பல வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply