தேசத்திற்கான செய்தி

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கென இலங்கை ஆயத்தமாகின்ற இக் காலப் பகுதியில் போர் தவிர்ப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள  முல்லைத்தீவின் குறுகிய கரையோரப்பிரதேசத்தில் புலிகளினால் மனிதக்  கேடயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டு பணயக்  கைதிகளாக இருக்கின்ற எமது சகோதர பிரஜைகளைப் பற்றி அரசாங்கம் கூடிய அக்கறை செலுத்துகின்றது. 

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற சமாதானத்தை மதிக்கின்ற மக்களின் அளப்பரிய அபிலாஷை,  புலிகளின் பயங்கரவாதத்தின் கீழ் சொல்லொணா கஷ்டங்களிலிருந்தும் வேதனைகளிலிருந்தும் தமது சகோதர மக்களை துரிதமாக விடுவித்துக் கொள்வதாகும்.

நீண்ட காலமாக புலிகளினால் அடிமை நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ள மக்களுக்கும்,  முழு நாட்டிலும் பயங்கரவாதத்தை இல்லாமற் செய்து சுதந்திரத்தையும்  ஜனநாயகத்தையும் மீண்டும் நிலை நிறுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள மனிதாபிமான செயற்பாட்டின் எஞ்சிய பகுதியை நிறைவு செய்வதற்கு மேற்கொள்ளப்படுகின்ற உன்னதமான நடவடிக்கைக்கு வீரமிக்க பாதுகாப்புப் படைகள் தயாராக இருக்கின்றன.

பயங்கரவாதத்துடன் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளின் போது இலங்கைப் பாதுகாப்புப் படையினர் சர்வதேச மனிதாபிமான சட்டங்களையும் மனித உரிமைகளையும் போற்றும் வண்ணம் முன்னுதாரணத்துடன் செயற்பட்டுள்ளனர்.

சாதாரண மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத விதத்தில் அவர்கள் காட்டியுள்ள பண்பான நடத்தையும்,  ஒழுக்கநெறியும் பயங்கரவாதத்தை இல்லாமற் செய்வதற்கான இம்முயற்சிக்கு பெற்றுத்தந்துள்ள பங்களிப்பும்  சாதாரணமானதொன்றல்ல. இச்செயற்பாடுகளின் இந்தத் தரங்களை அண்மிக்கவும் இயலாத உலகத்தின் ஏனைய படைகளுடன் ஒப்பிடும்போது, இது மிகவும் உயர்வாகப் பாராட்டப்படக் கூடியதொன்றாகும்.

போர் தவிர்ப்பு வலயத்தில் யுத்ட கேடயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு,  2009 ஏப்ரல் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடு இரவிலிருந்து 2009 ஏப்ரல் 14ம் திகதி செவ்வாய்க்கிழமை நடு இரவு வரை, பாரம்பரிய புத்தாண்டுக் காலப்பகுதியில், பாதுகாப்புப் படையினர் தமது செயற்பாடுகளை வரையறுத்துக் கொள்ளுமாறு மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கட்டளை விடுத்துள்ளார். போர் தவிர்ப்பு வலயத்திலுள்ள  பொது மக்கள் சுதந்திரமாகவும் கட்டுப்பாடுகள் எதுவுமின்றியும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வருவதற்கான வசதிகளை ஏற்படுத்து முகமாகவே ஜனாதிபதி அவர்களினால் இப்பிரகடனம் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் ஜனவரி மாத இறுதிப் பகுதியில் ஜனாதிபதி அவர்களினால் பொது மக்கள் போர் தவிர்ப்பு வலயத்துக்குள் வருவதற்காக, போர் நடவடிக்கைகள் 48 மணித்தியாலங்கள் இடை நிறுத்தப்பட்டபோது, புலிகள் அச்சந்தர்ப்பத்தை வஞ்சகத்தனமாகப் பயன்படுத்தி அவர்களுடைய கனரக ஆயுதங்கள், மோட்டார் ஆகியவற்றை இவ்வலயத்திற்கு எடுத்துச் சென்று பாதுகாப்புப் படையினருக்கு எதிராகத் தாக்குதல் நடத்திய விதம் நினைவுக்கு வருகின்றது.

பொது மக்களுக்கு சேதங்கள்  ஏற்படுவதைத் தடுப்பதற்காக பண்பான நடத்தையுடன் செயற்பட்டு,  திருப்பித் தாக்குதல் மேற்கொள்ளாமையினால் பாதுகாப்புப் படையினர் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிட்டது.

புலிகள் தம்மிடம் எஞ்சியுள்ள கனரக ஆயுதங்களினால் முழுமையாக போர் தவிர்ப்பு வலயத்தை பலப்படுத்திக் கொண்டதன் மூலம், அங்கு அகப்பட்டிருந்த அப்பாவி மக்களின் வாழ்க்கையை ஆபத்துக்குள்ளாக்கியதென்பதை அரசாங்கம் நன்கு அறியும்.

எனவே, அப்பாவி மக்களை போர் தவிர்ப்பு வலயத்திலிருந்து வெளியேறுவதற்கு இடமளிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் புலிகளுக்கு மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார். அத்துடன் புலிகளால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள பொது மக்களை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுக்க வேண்டியது சர்வதேச சமூகத்தினதும் வெளிநாடுகளில் வாழுகின்ற தமிழர்களினதும் பாரிய பொறுப்பாகும்.

தமிழ்-சிங்கள புத்தாண்டு இலங்கை மக்கள் மத்தியிலுள்ள நல்லெண்ணத்தை அடையாளப்படுத்துகின்றது. புத்தாண்டின் தாற்பரியத்துக்கு இணங்க, புலிகள் தனது யுத்தத் தோல்வியை ஏற்றுக்கொண்டு,  பயங்கரவாதத்தையும் வன்முறையையும்  முழுமையாகக்  கைவிட்டு ஆயுதங்களை கீழே வைத்து சரணடைவது காலத்திற்கு உசிதமானது.

நீண்ட காலமாக தாய் நாட்டிற்குப்  பீடையாக இருந்த பயங்கரவாதத்திலிருந்து விடுபட்டு, சமாதானம் சுபீட்சம்  நிறைந்த யுகமொன்றின் ஆரம்பம் இப்புத்தாண்டில் உருவாக வேண்டும் என்பதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் முக்கிய பிரார்த்தனையாகும்.

மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply