கருப்புப் பண ஒழிப்பு என்ற மகா யாகத்தில் மக்கள் மனப்பூர்வமாக இணைந்துள்ளனர்: மோடி பெருமிதம்

modiபிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதியன்று வானொலியின் மூலம் நாட்டு மக்களுடன் முதன்முறையாக உரையாடினார். தொடர்ந்து ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி உரையாற்றி வருகிறார்.அவ்வகையில், பிரதமரின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பானது.

இன்றைய உரையின்போது பேசிய பிரதமர் மோடி, தவறான வழியில் சம்பாதித்த கருப்புப் பணத்தை மாற்ற ஏழை மக்களை பயன்படுத்தி வருபவர்களையும், மக்களை திசைதிருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களையும் வன்மையாக கண்டித்தார்.

ஏழை,எளிய மக்கள், விவசாயிகள், கூலி தொழிலாளைகள் உள்ளிட்ட சமூகத்தில் அதிக அளவிலான மக்களுக்கு பயன் தருவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உங்களுடைய கணக்கில்வராத பணத்தில் இருந்து விடுபடுவதற்காக ஏழை மக்களின் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம் என்றும் அவர் எச்சரித்தார்.

பணமே இல்லாமல் வங்கி கார்டுகள் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் பழக்கத்துக்கு மக்கள் மாறவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் உள்ள இளைஞர்கள் மற்றவர்களுக்கு இவ்வகையிலான பணமில்லாத பரிவர்த்தனைகளை கற்றுத்தர வேண்டும். இந்த புரட்சியை ஏற்படுத்த ஒவ்வொரு இளைஞரும் முன்வர வேண்டும். புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் முடிவு என்பது அவ்வளவு எளிதானது அல்ல, ஆனால், இந்த நடவடிக்கை இறுதியில் மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும். இதனால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் எனக்கு புரிகிறது.

ஆனால், நமது நாட்டை கடந்த 70 ஆண்டுகளாக பாதித்துள்ள நோயை தீர்ப்பதற்கான சிகிச்சை அவ்வளவு எளிதானதாக இருக்க முடியாது.

இங்குள்ள 125 கோடி மக்களின் முடிவு நமது நாட்டை புதிய சக்தியாக உருமாற்றும் என்று நான் நம்புகிறேன். நெருப்பில் புடம்போட்ட தங்கமாக இனி இந்தியா மிளிரும். உங்களுடைய ஒளிமயமான எதிர்காலத்துக்காக இந்த திட்டத்தை நீங்கள் வெற்றிபெற செய்ய வேண்டும்.

இன்னும்கூட சிலர் தங்களிடம் இருக்கும் கருப்புப் பணத்தை மாற்ற வழிதேடிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய ஜன்தன் யோஜனா வங்கிக் கணக்குகளை அவர்கள் பயன்படுத்த நீங்கள் துணைபோக கூடாது என்று பேசிய பிரதமர், மத்திய அரசின் இந்த அதிரடி முடிவை நடைமுறைப்படுத்த கடுமையாக உழைக்கும் வங்கிகள் மற்றும் தபால் நிலைய ஊழியர்களை வெகுவாக பாராட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply