சிரியாவின் அலெப்போ நகரில் விமானப்படை தாக்குதலுக்கு 21 பேர் பலி
சிரியாவில் போராளிகள்வசம் சிக்கியுள்ள அலெப்போ மற்றும் இட்லிப் மாகாணங்களை மீட்பதற்காக ரஷிய விமானப்படையின் உதவியுடன் அரசுப் படைகள் சமீபகாலமாக ஆவேச தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலின் எதிரொலியாக போராளிகள் பின்வாங்க தொடங்கியுள்ளதால் அரசுப் படைகள் போர் விமானங்கள் மூலம் குண்டுகளைவீசி ஆக்ரோஷ தாக்குதல் நடத்தி வருகின்றன.இந்த தாக்குதலில் பெரும்பாலும் பொதுமக்களே அதிகம் கொல்லப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் குற்றம்சாட்டி வருகின்றன.
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்பதற்குள் அலெப்போவில் இருந்து போராளிகளை விரட்டியடிக்க வேண்டும் என்ற குறிக்கோளில் ராணுவப்படைகள் ஆவேசமான அதிரடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால், அலெப்போ நகரவாசிகளில் பலர் உயிர்பயத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இதுவரை சுமார் 40 ஆயிரம் மக்கள் இவ்வாறு வெளியேறியுள்ள நிலையில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 20 ஆயிரம் பேர் தங்களது வீடுகளில் இருந்து மாற்றிடங்களை நோக்கி சென்றுள்ளனர்.
இந்நிலையில், அலெப்போ நகரின் கிழக்கு பகுதியில் உள்ள ஜுப் அல் குபே மாவட்டத்தில் இன்று விமானப்படை நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் இரு குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் அங்குள்ள போர் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
சிரியாவை சுமார் 33 ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் அதிபர் பஷர் அல் ஆசாத்தை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை அப்பாவி பொதுமக்கள் உள்பட சுமார் மூன்று லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து உடலுறுப்புகளை இழந்து மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ளனர்.
சுமார் 50 லட்சம் மக்கள் வெளிநாடுகளிலும், 70 லட்சம் மக்கள் உள்நாட்டிலும் இடம்பெயர்ந்து அகதிகளாக பிறபகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர், என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply