ஆப்கானிஸ்தானில் மாணவரை பொது இடத்தில் தூக்கில் போட்ட தலீபான்கள்
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆதிக்கம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அவர்களை ஒடுக்கும்பணியில் உள்நாட்டு படையினருடன், அமெரிக்க படையினர் கைகோர்த்து செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், காபூல் அருகே அமைந்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பாய்ஸ் உல் ரகுமான் வார்டாக் என்ற மாணவரை தலீபான்கள் பொது இடத்தில் தூக்கில் போட்டனர். இவர், காபூல் பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தின் 4-ம் ஆண்டு மாணவர் ஆவார்.
முல்லா மிர்வாயிஸ் என்ற உள்ளூர் தலீபான் உளவுப்படை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதில், இந்த பாய்ஸ் உல் ரகுமான் வார்டாக்குக்கு பங்கு உண்டு என்று தலீபான்கள் குற்றம் சாட்டி, அவரை கொல்வதற்கு சந்தர்ப்பம் எதிர்பார்த்து காத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த மாணவர் விடுமுறையை ஊரில் குடும்பத்தினருடன் கழிக்க நினைத்த நேரத்தில் தலீபான்கள் பிடித்து சென்று, ஈவு இரக்கமின்றி பொது இடத்தில் தூக்கில் போட்டு விட்டனர். இந்த சம்பவம், கடந்த வியாழக்கிழமை நடந்து இப்போதுதான் அதுபற்றிய தகவல்கள் கசிந்துள்ளன.
இதுதொடர்பாக அரசு செய்தித் தொடர்பாளர் அப்துல் ரகுமான் மங்கல் கூறும்போது, “எங்களுக்கு மாணவர் பாய்ஸ் உல் ரகுமான் வார்டாக்கை தலீபான்கள் பிடித்து சென்று விட்ட தகவல் கிடைத்தது. அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் அதற்குள் அவர் தூக்கில் போடப்பட்டு விட்டார்” என்றார்.
தூக்கில் போடப்பட்ட நிலையில் அந்த மாணவரின் புகைப்படம், சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply