சுபீட்சம், புத்தெழுச்சி கொண்டுவரும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் : ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

நாடு சமாதானம், சுபீட்சத்திற்கான புதியதோர் உதயத்தை எதிர்பார்த்திருக்கும் இவ்வேளையில் எமது மக்களுக்கு சுபீட்சத்தையும் புத்தெழுச்சியையும் கொண்டுவரும்  தமிழ், சிங்கள புது வருடத்தை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்திருக்கும் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- மகிழ்ச்சி பொங்கும் இன்றைய தினத்தில் வடக்கிலும் தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் உள்ள எமது மக்கள் தேசம் முழுவதற்குமான ஒரு புதுவசந்தத்தை முன்னறிவிப்புச் செய்யும் புத்தாண்டின் மரபுகளை கடைபிடிக்கின்றனர். பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து ஏற்கனவே விடுபட்டு சுதந்திரத்தை அனுபவிக்கும் கிழக்கு வாழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும் சுதந்திர உணர்வோடும் சேர்த்து பால்பொங்கவைக்கும் தமது பாரம்பரிய மரபுடன் இப்புதுவருடத்தை வரவேற்கின்றனர். அதே போன்று வடபகுதி மக்களும் தாம் எதிர்பார்க்கும் சுபீட்சத்திற்கும் சுதற்திரத்திற்குமான சாதகமான அடையாளங்களை இப்புதுவருடத்தில் காண்பர்.

இப் புதுவருடம் எமது மக்களிடடையே அன்பையும் சகோதரத்துவத்தையும் மேலும் பலப்படுத்தி புதிய நம்பிக்கைகளை கொண்டுவரும் அர்த்தம் நிறைந்த பெருநாளாக இருக்கும். இது எமது அரசாங்கமும் எமது மக்களும் நீண்டநாள் எதிர்பார்த்திருந்த சமாதானத்தை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அர்ப்பணிப்புகளின் விளைவாகவே ஏற்பட்டுள்ளது.

புலரும் புத்தாண்டு எமது தேசத்திற்கு சமாதானத்திற்கான புதியதோர்உதயத்தையும் சுபீட்சத்தையும் கொண்டுவருவதோடு உலகின் கெளரவத்தையும் நன்மதிப்பையும் எமது நாட்டுக்குக்கொண்டுவரும். எமது மக்கள் புதுவருடத்தின் மரபுகளையும் சம்பிரதாயங்களையும் பேணுவதன் மூலம் ஏற்படுகின்ற ஐக்கியம், சகோதரத்துவம் என்பன நாட்டின் சுபீட்சத்திற்கு வழியமைக்கின்றது.

இந்த எதிர்பார்ப்பை மதித்து இம்முறை புதுவருடத்தை சம்பிரதாயபூர்வமாக பின்பற்றுவதற்கு அனைவரும் ஒன்றுபடுவார்கள் என்பது எனது நம்பிக்கையாகும்.

தேசிய விடுமுறை தினமான இந்த புதுவருட பண்டிகைத் தினத்தில் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்புக்காக சேவையில் ஈடுபட்டிருக்கின்ற முப்படையினர். பொலிஸார் மற்றும் ஏனைய கடமைகளில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் எனது புதுவருட நல்வாழ்த்துக்கள்!

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply