ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டது எப்படி?

ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க. எப்படி இருக்கும் என்ற கேள்வி கடந்த 2 மாதங்களாக தமிழக மக்கள் மனதில் இருந்தது.குறிப்பாக ஜெயலலிதா மரணம் அடையும்பட்சத்தில் முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு உருவானது.ஜெயலிலதாவுக்கு இதற்கு முன்பு பிரச்சனைகள் ஏற்பட்ட போதெல்லாம் ஓ.பன்னீர்செல்வம்தான் தற்காலிகமாக முதல்வர் பதவி ஏற்று கை கொடுத்தார். எனவே தற்போதைய சிக்கலான காலக்கட்டத்திலும் பன்னீர்செல்வமே முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்கட்டும் என்று பெரும்பாலான அ.தி. மு.க. தலைவர்கள் ஒருமித்த கருத்துடன் இருந்தனர்.

ஆனால் ஜெயலலிதா உயிர் பிரிந்த திங்கட்கிழமை மாலை அத்தகைய நிலை மாறியது. வேறு விதமான சூழ்நிலை உருவானது. அதாவது முதல்-அமைச்சர் பொறுப்பை கைப்பற்ற சாதி ரீதியிலான கருத்துக்கள் அதிக பலம் பெற்றன.

கடந்த மே மாதம் தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றிய போது ஜெயலலிதாவுக்கு அடுத்தப்படியாக ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகிய 5 அமைச்சர்கள் அதிகார பலம் மிக்கவர்களாக உயர்ந்தனர். இந்த 5 மூத்த அமைச்சர்களை சுற்றியே அ.தி.மு.க.வின் செயல்பாடுகளும் அமைந்தன.

இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் அடைந்ததும், இந்த 5 பேரில் ஒருவர்தான் அடுத்த முதல்வர் என்பது உறுதியானது. இந்த 5 பேரில் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன் இருவரும் தேவர் இனத்தைச் சேர்ந்தவர்கள்.

எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி மூவரும் கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தரப்பில் முதல்-அமைச்சர் பதவி தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தரப்பட வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.

அதற்கு 2 காரணங்கள் முன் வைக்கப்பட்டன. ஒன்று மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் கவுண்டர்கள் வாழும் கொங்கு மண்டலத்தில்தான் அ.தி.மு.க. அதிக வெற்றியை பெற்றது. இரண்டாவது, ஓ.பன்னீர்செல்வம் இரு தடவை முதல்வர் பதவியில் இருந்து விட்டார். எனவே இந்த தடவை விட்டுத் தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

கவுண்டர் இனத்தலைவர்களில் மூத்தவராகத் திகழும் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரையை முதல்வராக்க ஒரு தரப்பினர் வலியுறுத்தினார்கள். ஆனால் தம்பித்துரை பெயருக்கு அழுத்தமான ஆதரவு கிடைக்கவில்லை.

இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி பெயர் முதல்- அமைச்சர் பதவிக்கு கவுண்டர் இனத்தவர் மூலம் முன்னிலைப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அடுத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வமா, எடப்படி பழனிச்சாமியா என்ற விவாதம் கூட ஏற்பட்டு விட்டது. திங்கட்கிழமை காலையில் இருந்தே இந்த விவாதம் அப்பல்லோ மருத்துவமனையில் ஓசையின்றி நடந்தது.

இதற்கிடையே இதில் ஒரு முடிவு எடுக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு நடந்தது. புதிய முதல்-அமைச்சர் பதவி ஏற்பின் போது அமைச்சரவை மாற்றப்பட்டு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்க வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவியது.

இதை அறிந்ததும் செங்கோட்டையன் உள்பட முன்னாள் அமைச்சர்கள் பலர் மந்திரிசபையில் இடம் பிடிக்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டனர். சாதி ரீதியிலான குழப்பம் மெல்ல உருவான நிலையில், மூத்த தலைவர்களின் நெருக்கடியும் சேர்ந்து, அடுத்து என்ன நடக்குமோ தெரியவில்லையே என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

முதல்-அமைச்சர் பதவி மற்றும் அமைச்சர்கள் தேர்வு ஆகியவை தொடர்பாக கடும் விவாதம் ஏற்பட்டால் அது அ.தி.மு.க.வில் பிளவுக்கு பிள்ளையார் சுழி போட்டது போல ஆகி விடும் என்று சில மூத்த அமைச்சர்கள் கவலைப்பட்டனர். சசிகலாவுடனும் இதுபற்றி பேசினார்கள்.

அப்போது சசிகலா சமரச திட்டம் ஒன்றை தெரிவித்தார். “இப்போதைக்கு எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். ஜெயலலிதா இருந்தபோது எப்படி இருந்ததோ அப்படியே நீடிக்கட்டும். மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவி ஏற்கட்டும். கவுண்டர் இனத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்க செய்வது பற்றி பொதுக்குழுவில் பேசி முடிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கவுண்டர் இனத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர்கள் அனைவரும் கட்சி நலன் கருதி இதை ஏற்றுக் கொண்டதால் முதல்வர் பதவி பிரச்சனையில் சுமூக தீர்வு ஏற்பட்டது. இதனால்தான் ஓ.பன்னீர் செல்வம் சிக்கலின்றி மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply