ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை: பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி கடிதம்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை எழுந்திருப்பதை அடுத்து நடிகை கவுதமி பிரதமர் நரேந்திர மோடிக்கு இணைய தளம் வழியாக கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் இந்திய நாட்டின் சாதாரண குடிமகள் என்ற முறையில் நான் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். நான் ஒரு குடும்ப பெண், ஒரு தாய், ஒரு பணிபுரியும் பெண். எனது குடும்பம், எனது வாழ்க்கை பற்றி கவலைப்படும் நான், இதேபோல் மற்றவர்களின் வாழ்க்கையும் நன்றாக இருக்க வேண்டும் என்று கருதுபவள்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா திடீரென மறைந்த அதிர்ச்சியில் கோடானு கோடி மக்கள் இருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவராக இருக்கிறேன்.

ஜெயலலிதா இந்திய அரசியலில் மிக உயர்ந்த நிலையை அடைந்தவர், மிகுந்த ஆளுமை திறன் கொண்டவர். அனைத்து துறைகளிலும் உள்ள பெண்களுக்கு உத்வேகமாக அமைந்தவர்.

தமிழ்நாடு அவரது தலைமையின் கீழ் பல்வேறு முன்னேற்றங்களையும், வளர்ச்சிகளையும் பெற்றது. அவர் ஒரு மறக்க முடியாத வலிமையான சக்தி கொண்டவர். எல்லா பிரச்சினைகளையும் விடா முயற்சியுடன் உறுதியாக இருந்து தீர்த்து வைத்தவர். அவர் எல்லா மக்களுக்கும் ஊக்க சக்தியாக திகழ்ந்தவர்.

அவருடைய திடீர் மறைவு எல்லோருக்கும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் அவர் சில மாதங்களாக ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெற்றது தொடர்பாக பல மர்மங்கள், பதில் அளிக்க முடியாத கேள்விகள் இருக்கின்றன.

அவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டது, சிகிச்சை அளித்தது, பின்னர் அவர் நலம் பெற்று விட்டதாக அறிவித்தது. திடீரென இறந்து விட்டதாக அறிவித்தது இவை எல்லாவற்றிலுமே சரியான தகவல்கள் வெளியே வரவில்லை. எல்லாமே வெற்றிடமாக இருக்கிறது.

அவர் சிகிச்சை பெற்ற போது, அவரை பார்க்க சென்ற தலைவர்கள், பிரபலங்கள் ஒருவரைகூட அவரை பார்க்க அனுமதிக்கவில்லை. அவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை கூட நேரில் சென்று தெரிவிக்க முடியவில்லை.

ஏன் இந்த ரகசியம்? எதற்காக அவரை இப்படி தனிமைப்படுத்தினார்கள்? அவர் மிகப்பெரிய மக்கள் தலைவர். தமிழ்நாடு அரசின் தலைவர். அப்படி இருந்தும் ஏன் இவ்வளவு ரகசியம் காக்கப்பட்டது.

என்ன காரணத்துக்காக இப்படி செய்யப்பட்டது? முதல்-அமைச்சரை பார்க்க கூடாது என இவ்வளவு கட்டுப்பாடுகளை விதிக்க யாருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது?

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரை கவனித்து கொள்ளும் உரிமை, அவரது உடல்நலம் பற்றிய விவரங்கள் போன்றவற்றுக்கு யார் பொறுப்பு என்று முடிவு எடுத்தது யார்? இது சம்பந்தமாக மக்களுக்கு யார் பதில் சொல்வது? இதுபோன்ற கேள்விகள் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவர்களுடைய கேள்விகளை உங்களுடைய கவனத்துக்கு நான் கொண்டு வருகிறேன்.

இந்த விவகாரம் இன்றைக்கு விவாத பொருளாக மாறி இருக்கிறது. நாட்டில் ஜனநாயக முறையில் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவரின் உடல் நிலை குறித்து அறிந்து கொள்ள அனைத்து மக்களுக்கும் உரிமை இருக்கிறது. அதுவும் இவர் மாபெரும் மக்கள் தலைவர். அவருடைய உடல்நிலை தொடர்பாக சந்தேக கேள்விகள் எழுந்திருப்பது ஒரு அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவின் அனைத்து குடிமகன்களுக்கும் தங்களது உரிமையை கேட்டு போராட உரிமை உள்ளது. அதேபோல் இந்த ரகசியங்களையும் அறிய அவனுக்கு உரிமை இருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக நீங்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இது சம்பந்தமான விவரங்கள் வெளிவர தேவையானவற்றை செய்வீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் மிகச்சிறந்த தலைவர் என்பதை பல வழிகளில் ஏற்கனவே நிரூபித்து இருக்கிறீர்கள். நாட்டு மக்களின் எண்ணங்களை கவனத்தில் கொள்வீர்கள் என்பதை நான் நம்புகிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கவுதமி கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply