ஆட்சி – கட்சி விவகாரங்களில் தலையிடக்கூடாது: உறவினர்களுக்கு சசிகலா கட்டளை
முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக திடீரென மரணம் அடைந்ததால் ஆட்சியிலும், கட்சியிலும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.ஜெயலலிதா தனது அரசியல் வாரிசாக அதிகாரப் பூர்வமாகவோ அல்லது சூசகமாகவோ தனிநபர் யாரையும் அடையாளம் காட்டவில்லை.அ.தி.மு.க.வை தோற்றுவித்த எம்.ஜி.ஆர். மரணம் அடைந்த போது, அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ஜெயலலிதா மாபெரும் சக்தியாக உருவெடுத்தார். எம்.ஜி.ஆருடன் திரைப்படங்களில் நடித்து அமோக செல்வாக்கு பெற்றிருந்ததாலும், அரசியல் பணிகளில் சாதுர்யமாக நடந்து கொண்டதாலும், எம்.ஜி.ஆரின் முழுமையான ஒரே வாரிசாக ஜெயலலிதா தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.
ஆனால் தற்போது ஜெயலலிதா மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை அப்படி பூர்த்தி செய்ய அ.தி.மு.க.வில் மக்களிடம் ஏகோபித்த ஆதரவை பெற்ற தலைவர்கள் யாருமே இல்லை. இதன் காரணமாக தற்போதைய மூத்த தலைவர்கள் தங்களுக்குள் ஒருமித்த கருத்தை உருவாக்கி கொண்டு, ஆட்சியையும், கட்சியையும் நிர்வகிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் தான் முதல்-அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுள்ளார். இதற்கு முன்பு இக்கட்டான காலத்தில் 2 தடவை கை கொடுத்தவர் என்ற அனுபவத்தின் பேரில் அவர் முதல்வராகி உள்ளார்.
அதுபோல ஜெயலலிதா வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்ந்து எடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவுடன் சுமார் 30 ஆண்டுகள் தோழியாக இருந்தவர் என்ற அடிப்படையில் அவரை பொதுச் செயலாளர் ஆக்க முயற்சி நடக்கிறது.
சசிகலா பொதுச் செயலாளர் ஆக தேர்வானால் அ.தி.மு.க. ஆட்சியும், கட்சியும் ஒரே இனத்தை சேர்ந்தவர்களிடம் போய் விடும் என்று அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு நிலவுகிறது. அது மட்டுமின்றி சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் ஆட்சியும், கட்சியும் செல்ல இது வழிவகுத்து விடும் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.
குறிப்பாக ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை சசிகலா குடும்பத்தை சேர்ந்த சுமார் 14 பேர்களை அ.தி.மு.க. ஆட்சி விவகாரங்களில் எந்த விதத்திலும் தலையிட கூடாது என்ற கடுமையான உத்தரவைப் பிறப்பித்து இருந்தார். ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் இனி அவர்கள் ஆட்சியிலும், கட்சியிலும் தலையிட்டு அதிகாரம் செய்யக்கூடும் என்ற ஒருவித எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
அ.தி.மு.க. ஆட்சியின் அதிகார மையமாக சசிகலா குடும்பத்தினர் மாறிவிடுவார்கள் என்ற பேச்சும் பரவலாக காணப்படுகிறது.
அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியிலும் இது தொடர்பான பேச்சுகள் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்த நிலையில் இந்த சர்ச்சைகளுக்கும், மக்கள் மனதில் உள்ள சந்தேகங்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி நடவடிக்கையை சசிகலா மேற்கொண்டார்.
கடந்த புதன்கிழமை அவர் தனது உறவினர்கள் அனைவரையும் போயஸ் கார்டன் இல்லத்துக்கு வரவழைத்தார். அப்போது அவர்களிடம் சசிகலா, ‘‘நீங்கள் யாரும் அ.தி.மு.க. கட்சி விவகாரங்களில் ஈடுபட கூடாது. அதுபோல ஆட்சி நிர்வாகத்திலும் மூக்கை நுழைத்து எந்த உத்தரவும் போடக்கூடாது. எந்த விதத்திலும் ஆட்சியிலும், கட்சியிலும் உங்கள் குறுக்கீடு இருக்கக் கூடாது’’ என்று உத்தரவிட்டார்.
சசிகலாவின் இந்த அதிரடி உத்தரவை கேட்டதும் அவரது உறவினர்கள், அதை ஏற்றுக் கொண்டனர்.
மறுநாள் (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை சசிகலா சந்தித்தார். அதுபோல அரசு உயர் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகளையும், சசிகலா சந்தித்தார்.
அப்போது அவர்களிடம், ‘‘எனது உறவினர்கள் யார், எந்த உத்தரவு பிறப்பித்தாலும் நீங்கள் ஏற்க கூடாது. அவர்களது கோரிக்கைகளை நீங்கள் ஏற்று எதுவும் செய்ய வேண்டியதில்லை’’ என்று சசிகலா கேட்டுக் கொண்டார். சசிகலாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சசிகலாவுடன் தற்போது சில உறவினர்கள் போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ளனர். இன்னும் சில தினங் களில் இளவரசி தவிர சசிகலா உறவினர்கள் அனைவரும் போயஸ்கார்டன் வீட்டில் இருந்து வெளியேறி விடுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
சசிகலா எடுத்துள்ள இந்த நடவடிக்கையின் பின்னணியில் முக்கிய காரணம் இருப்பதாக தெரிகிறது. சசிகலா குடும்பத்தினர் தொடர்பாக எழுந்துள்ள விமர்சனத்தை இது தடுக்கும் என்கிறார்கள்.
அதோடு சசிகலா மீது புதிய இமேஜ் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறார்கள். அ.தி.மு.க.வில் புதிய பொறுப்புகளை ஏற்க இந்த இமேஜ்தான் கை கொடுக்கும் என்று சசிகலா நம்புவதாக தெரிகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply