மும்பையில் வானில் பறந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பிடித்தது; விமானி சாவு 3 பேர் படுகாயம்

மும்பை, மும்பையில் வானில் பறந்து கொண்டு இருந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமானி பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர்.ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. மும்பை, ஜூகு விமானதளத்தில் இருந்து சுற்றுலா ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை 11 மணியளவில் அமன் ஏவியேஷனுக்கு சொந்தமான ‘ராபின்சன் ஆர்44 ஆஸ்ட்ரோ’ ரக ஹெலிகாப்டர் பயணிகளுடன் சொகுசு சவாரிக்கு புறப்பட்டது. ஹெலிகாப்டரை விமானி பிரபுல் மிஸ்ரா இயக்கினார். அதில் ரித்தேஷ் மோடி, பிந்திரா மோடி என்ற 2 பயணிகளும், சஞ்சய் சங்கர் என்ற தொழில்நுட்ப வல்லுனரும் இருந்தனர்.இந்தநிலையில் மும்பை ஆரே காலனி பகுதியில் பறந்து கொண்டு இருந்த போது, அங்கு மரங்கள் அடர்ந்த பகுதியில் ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. அந்த வேகத்தில் ஹெலிகாப்டர் தீப்பற்றியும் எரிந்தது.விமானி பலி

 

இதை அறிந்த அந்த பகுதி மக்கள் தீயணைப்பு படைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் 5 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கி படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை அவர்கள் மீட்டனர். விமானி பிரபுல் மிஸ்ரா உயிரிழந்துவிட்டதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் கூறினர். படுகாயம் அடைந்த மற்ற 3 பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஹெலிகாப்டரில் பிடித்த தீ மதியம் 1.30 மணியளவில் அணைக்கப்பட்டது.செல்போனில் படம்

 

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடத்தை பார்க்கவும், செல்போனில் படம் பிடிக்கவும் அங்கு ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இந்தநிலையில் விபத்தை பார்த்த ஒருவர் கூறும்போது, ‘‘சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் விளையாடிய பகுதியின் அருகில் திடீரென ஹெலிகாப்டர் விழுந்து 3 முறை பல்டி அடித்து நொறுங்கியது’’ என்றார்.மற்றொருவர் கூறும்போது, ‘‘ஹெலிகாப்டர் மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்துள்ளது. குடியிருப்பு பகுதியில் விழுந்து இருந்தால் மிகப்பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும்’’ என்றார். விபத்திற்குள்ளான விமானம் 1992–ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது ஆகும். அதில் பல கோளாறுகள் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.விசாரணைக்கு உத்தரவு

 

இதனிடையே, ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்த விமான விபத்து விசாரணை அமைப்பு (ஏ.ஏ.ஐ.பி) உத்தரவிட்டிருக்கிறது.இதுபற்றி டெல்லியில் அந்த அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மும்பையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து, தடயங்களை சேகரித்து வருகின்றனர். நாங்களும் இதுபற்றி விசாரணை நடத்துவதற்காக அதிகாரிகளை நாளை (அதாவது இன்று) மும்பை அனுப்புவோம். முதல்கட்ட விசாரணை அறிக்கை ஒருவாரத்துக்குள் சமர்ப்பிக்கப்படும்’’ என்றார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply