கருணாநிதியை பார்க்க வந்த வைகோ கார் மீது தாக்குதல்: வருத்தம் தெரிவித்தார் ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொண்டை மற்றும் நுரையீரலில் தொற்று ஏற்பட்டதால் அவர் சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டார். இதனால் அவருக்கு “டிரக்யாஸ்டமி” சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், தி.மு.க.வையும் அக்கட்சியின் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக இன்று சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்தார். ஆனால், மருத்துவமனைக்கு வெளியே சாலையில் திரண்டிருந்த தி.மு.க. தொண்டர்கள், வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதுடன் அவரது கார் மீதும் தாக்குதல் நடத்தினர்.

பின்னர் இரு கட்சி தொண்டர்களிடையே கைகலப்பும் ஏற்பட்டது. இந்த களேபரம் காரணமாக, கருணாநிதியை சந்திக்காமலேயே வைகோ திரும்பிச் சென்றுவிட்டார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் திருச்சி சிவா எம்.பி., தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் அந்த இடத்திற்கு வந்து நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தனர்.

இதுபற்றி அவர்கள் நிருபர்களிடம் கூறும்போது, ‘தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க ம.தி.மு.க. தலைவர் வைகோ வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரை வரவேற்று அழைத்து வருவதற்காக நாங்களும் தயாராக காத்திருந்தோம். வைகோவை அழைத்து வரும்படி கட்சியின் பொருளாளர் ஸ்டாலின்தான் எங்களை அனுப்பினார்.

ஆனால் நாங்கள் மருத்துவமனையில் இருந்து வெளியே வருவதற்குள், துரதிர்ஷ்டவசமாக இந்த சம்பவம் நடந்துவிட்டது. வைகோவின் கார் திரும்பிச் சென்றுவிட்டது. அதனால் அவரை அழைத்துச் செல்ல முடியவில்லை. நடந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். பொருளாளர் ஸ்டாலினும் வருத்தம் தெரிவித்துள்ளார்” என்றனர்.

இதுபற்றி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தலைவர் கலைஞர் அவர்களின் உடல் நலம் விசாரிக்க வந்த மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்களை தடுத்து நிறுத்தியதை நான் கண்டிக்கிறேன். மருத்துவமனையில் நான் இல்லாத நேரத்தில் வைகோ அவர்களுக்கு நேர்ந்த இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

தி.மு.க.விற்கு எதிரான பிரச்சாரங்களில் யார் ஈடுபட்டு வந்ததாலும் கழக தோழர்கள் அவர்களுக்கு எதிராக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தலைவர் கலைஞர் அவர்களுக்கோ, எனக்கோ எக்காலத்திலும் உடன்பாடானது அல்ல. கழகத்திற்கு எதிரான பிரச்சாரங்களை அரசியல் ரீதியாக ஜனநாயக முறையில் எதிர்கொள்ளும் சக்தி மிக்க தொண்டர்கள் நிறைந்த இந்த இயக்கத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கழக தோழர்கள் தவிர்த்து அமைதி காக்குமாறு கண்டிப்புடன் கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply