களுத்துறை மாவட்டத்தில் தமிழ் பாடசாலை அமைவதில் மகிழ்ச்சி : பிரபா கணேசன்

களுத்துறை மாவட்டத்தில் உயர்தர வகுப்புகளுடனான தனி பெரும் பாடசாலை இல்லை என்பது களுத்துறை மாவட்ட தமிழ் மக்களின் குறைபாடாகவே நிலவி வந்தது. இன்று இக்குறைபாடு நீக்கப்படுவதற்கான அறிகுறி தென்பட்டுள்ளதை அறியக்கூடியதாக இருக்கின்றது. மத்துகம நகரில் இப்பாடசாலை அமையுமாயின் அது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும், களுத்துறை மாவட்டத்தில் வாழும் ஏழை எளிய தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கு சரியான பாடசாலைகள் இல்லை. அனைத்து தோட்டப் பாடசாலைகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை, தளபாட பற்றாக்குறை போன்ற பல குறைபாடுகள் நிறைந்துள்ளன. இங்கு கல்வி பயில்விக்க வரும் ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்று செல்கிறார்கள். உயர்தர வகுப்புகளுக்காக கொழும்பு மாவட்ட பாடசாலைகளுக்கு வர வேண்டிய நிலையிலேயே அங்குள்ள மாணவர்கள் இருக்கின்றார்கள். மேலும் பல தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியிலேயே கல்வி கற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு களுத்துறை மாவட்ட மையப்பகுதியான மத்துகம நகரில் தனிபெரும் தமிழ் பாடசாலை அமையுமாயின் அது வரப்பிரசாதமாகும். இப்பாடசாலை அமைப்பதில் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் அமைச்சர் எடுத்திருக்கும் முயற்சி வரவேற்கத்தக்கதாகும்.
இப்பாடசாலையினூடாக களுத்துறை மாவட்ட மாணவர்கள் நிச்சயமாக பயன்பெறுவார்கள். நான் கடந்த அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினராகவும் சில காலம் பிரதி அமைச்சராகவும் இருந்த பொழுது களுத்துறை மாவட்டத்தில் தமிழ் பாடசாலைகள் அமைப்பதற்கு முயற்சிகள் எடுத்திருந்தேன். இருப்பினும் அது கைகூடவில்லை. கடந்த கால அரசாங்கத்தில் இனவாதம் மேலோங்கி இருந்ததை நான் ஏற்றுக் கொள்கின்றேன். இருப்பினும் அவ் இனவாதத்துடன் இணைந்திருந்ததாலேயே என்னால் முடிந்தளவு கொழும்பு மாவட்ட தமிழ் பாடசாலைகளுக்காக பாரியளவு நிதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. இல்லாவிட்டால் கடந்த ஐந்து வருட காலத்தில் கொழும்பில் இருக்கும் தமிழ் பாடசாலைகள் மிகவும் பின்தள்ளப்பட்டிருக்கும்.
அமைச்சர் அவர்களின் முயற்சி கைகூடுவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் இப்பாடசாலை அமைவதில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அப்பாவி ஏழை தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் வளம் பெறுவதற்கு இப்பாடசாலை காலத்தின் கட்டாயமாகும். களுத்துறை மாவட்டத்திலும் இன்னும் இனவாதிகள் இப்பாடசாலை அமைப்பதில் தடைகளை ஏற்படுத்துவார்களேயாயின் அவற்றை எதிர்த்து நின்று நல்லாட்சி என்று சொல்லப்படும் இவ் அரசாங்கத்தின் ஊடாக இப்பாடசாலையை அமைச்சர் அமைத்து தருவார் என்று நாம் எதிர்ப்பார்க்கின்றோம். இப்பாடசாலையின் கட்டிட திறப்பு விழாவே அமைச்சரின் அடுத்த பிறந்தநாள் பரிசாக இருக்கும் என்று நாம் எதிர்ப்பார்ப்போம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply