2020 வரை அரசை கவிழ்க்கவும் முடியாது; அசைக்கவும் முடியாது

இந்த அரசாங்கத்தை 2020 வரை எவராலும் கவிழ்க்கவும் முடியாது; அசைக்கவும் முடியாது. அரசாங்கத்தை மாற்றுவதற்குரிய முழு அதிகாரமும் ஜனாதிபதியிடமே இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியில் மீனவருக்கு உயிர்காப்பு அங்கி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

 

சிலர் தற்போது பனிமூட்டமான காலநிலை என்பதனால் 2017 ல் அரசை கவிழ்ப்பதற்கு கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் எதிர்வுகூறிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தாண்டில் அரசை கவிழ்ப்பதற்கு கனவு கண்டுகொண்டிருப்பவர்களுக்கும் எதிர்வுகூறுபவர்களுக்கும் ஒரு விடயத்தை கூறவிரும்புகின்றேன். காணும் கனவோ ஒருபோதும் நனவாகப் போவதில்லை. இந்த அரசை 2020ம் ஆண்டு வரை எவராலும் கவிழ்க்கவும் முடியாது அசைக்கவும் முடியாது.

 

ஏனெனில் இந்த அரசை மாற்ற வேண்டுமானால் அதற்குரிய முழு அதிகாரமும் ஜனாதிபதியிடமே உள்ளது. எனினும் ஜனாதிபதிக்கு இன்னும் 4 1/2 ஆண்டுகள் செல்லும் வரை பாராளுமன்றத்தை க​லைக்க அதிகாரம் கிடைக்கப் போவதில்லை. பாராளுமன்றத்திலுள்ள பெரும்பான்மையினர் வாக்களித்து நிறைவேற்றப்பட்ட திருத்தங்களின்படி இந்த அரசு 2020 ம் ஆண்டு வரையும் பயணிக்கும். எனவே அரசை கவிழ்ப்பதாக கனவு காண்பவர்களின் கனவு வெறும் கனவாகவே இருக்கும்.

 

இன்று சந்தையில் அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது எனினும் அடுத்த வாரமளவில் அரிசி விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். வாழ்க்கைச் செலவு பற்றிய குழு என்ற அடிப்படையில் இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்திருக்கிறோம். இந்தியாவில் இருந்து ஒரு கிலோ அரிசியை 35 ரூபாவுக்கு கொள்வனவு செய்கிறோம். தற்போது அரசிடம் ஓரளவு அரிசி கையிருப்பில் உள்ளது. கையிருப்பில் உள்ள அரிசி 2017ம் ஆண்டு ஜுன் மாதம் வரை போதுமானதாக இருக்கும் என்றாலும் உணவு பாதுகாப்பு என்பதை கருத்திற் கொண்டு மிகவும் கவனமாக உணவு பயன்பாடு இருக்க வேண்டும். எனவே நுகர்வோரை பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது.

 

சில அரிசி ஆலை உரிமையாளர்கள் நெற் சந்தைப்படுத்தும் சபையிலிருந்து நெல்லை கொள்வனவு செய்து அவற்றை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்களுக்கு இன்னும் சில தினங்களில் தக்க பாடம் புகட்டுவோம்.

 

அரிசி விலை அதிகரிப்பு என்பதற்கு பின்னணியில் அரிசி ஆலை உரிமையாளர்களே இருக்கிறார்கள். அத்துடன் அடுத்தாண்டு எமக்கு அரிசி தட்டுப்பாடொன்று ஏற்படவுள்ளது. ‘எல்நிநோ’ என்ற இயற்கை நடைமுறையினால் எங்களுக்கு எதிர்பார்த்த மழை கிடைக்காது. நீர்த் தேக்கங்களிலும் விவசாயம் செய்யுமளவுக்கு போதுமான நீர் கிடையாது. எனவே செய்கை பண்ணப்பட்ட விளை நிலங்களும் நீரின்றி வரண்டுபோகும் நிலை உருவாகும். என்றாலும் அரசு என்ற வகையில் இதற்கு முகம் கொடுக்க நாம் தயாராகிக் கொண்டிருக்கின்றோம்.

 

எனவே நாட்டு மக்களை பட்டினியில் போட நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். இது ஐக்கிய தேசிய கட்சியின் அரசல்ல. அதேபோல இது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசுமல்ல. இது ஒரு தேசிய அரசு. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் இந்த அரசுக்குள் இருந்து கொண்டு ‘நீங்கள் வௌியேறுங்கள் இந்த அரசாங்கம் எங்களுடையது’ என்று கூறிக்கொண்டு ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டிருப்பது முறையல்ல. இருதரப்பினரதும் ஆலோசனைகள் பெறப்பட்டு அரசின் மீது சுமத்தப்படும் விமர்சனங்களை சரியான முறையில் கவனித்து மக்களுக்கு சிறந்ததையே பெற்றுக் கொடுக்க வேண்டும். இதனையே நாம் செய்ய வேண்டும்.

 

ஐக்கிய தேசிய கட்சி கொண்டு வரும் தேவையில்லாத ஆலோசனைகளோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொண்டு வரும் தேவையில்லாத ஆலோசனைகளோ இந்த தேசிய அரசுக்குள் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது. நாம் இரு தரப்பு இவற்றை ஆராய்ந்து தேவையற்றதை நீக்கி விடுவோம். அப்போதே மக்களுக்கு சரியானது கிடைக்கும்.

 

நீ செய்த திருட்டுகளை நான் மூடி மறைக்கின்றேன். நான் செய்த திருட்டுகளை நீ மூடி மறைத்து விடு. என்று இருவரும் சேர்ந்து திருடுவதற்காக இந்த தேசிய அரசை உருவாக்கவில்லை. கடந்த அரசாங்கத்தில் அதிகளவு திருட்டுக்கள் செய்யப்பட்டது என இந்த அரசாங்கத்திலும் திருடுகிறோம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. கொஞ்சமாக திருடினாலும் அதிகமாக திருடினாலும் திருட்டு திருட்டேதான்.

 

கடந்த அரசாங்கத்தில் அதிகளவு திருடியவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவது போன்று இந்த அரசாங்கத்திலும் சிலர் கொஞ்சமாக திருடுகிறார்கள் என்று கூறுவார்களாயின் அவர்களுக்கும் அதே தண்டனை வழங்கபட வேண்டும். எனவே 2016 ல் மக்களின் பணத்தை திருடினார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள சித்தப்பாமார், மகன்மார், மாமாமார், மருமகன்கள் எல்லோருக்கும் தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என நான் நம்புகின்றேன்.

 

இப்படி செய்யாவிட்டால் அதற்கு எதிராக நாங்கள் பாராளுமன்றத்திற்குள்ளும் அமைச்சரவைக்குள்ளும் அதற்கு வெளியேயும் நடவடிக்கை எடுப்போம். எனவே இந்த அரசு 2020 ம் ஆண்டு வரை பயணிப்பதை யாராலும் தடுக்க முடியாது.

 

கனவு காண்பதற்கு சிலருக்கு உரிமையிருக்கின்றது என்றாலும் அந்த கனவை நனவாக்குவது எளிதான காரியமல்ல. அவர்கள் டிசம்பர், ஜனவரி மாதம் பனிமூட்ட குளிரில் காணும் கனவுகள் நன்றாக காணட்டும். எங்களுக்கு அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றாலும் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் அரசே வீழ்த்த அல்லது கவிழ்க்க நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply